கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த 9/11 உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல் அசம்பாவிதத்திற்கு உசாமா பின் லேடன் தான் காரணம் எனக் கூறி, "பின்லேடனை உயிருடனோ /பிணமாகவோ பிடிப்பதை இலட்சியமாகக்" கொண்டு, ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபான்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக போர் நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா, தாலிபான்களை ஆட்சியிலிருந்து இறக்கி கர்ஸாயி தலைமையில் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்தி, தொடர்ந்து பன்னாட்டுப் படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தும், இந்த நிமிடம் வரை உசாமா பின்லேடனின் ஒரு துரும்பைக் கூட அசைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு நேர்மாற்றமாக 2001-ல் இருந்ததை விட அல்காயிதா இன்று உலகளாவிய அளவில் தனது கரங்களை ஆழமாக ஊன்றி வருவதாகவே உலகெங்கிலுமிருந்தும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தவறான வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் உலகில் தீவிரவாதம் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர் என்ற அவப்பெயரோடு ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகை விட்டு தன் சொந்த மாளிகைக்குத் திரும்பிய பின், வெள்ளை மாளிகைக்குப் புதிதாக குடிவந்த கறுப்பின அதிபர் ஒபாமா, உலகில் தீவிரவாத செயல்களின் அதிகரிப்பிற்கு தாலிபான்கள் தான் காரணம் என்றும் அவர்களை அழிப்பதே தன் இலட்சியம் என்றும் புஷ்ஷின் அதே கறுப்புக் கொள்கையினை இன்று தொடர்கின்றார். ஆனால், இதுவரை தாலிபான்களையும் ஒழித்ததாகத் தெரியவில்லை. மாறாக, பாகிஸ்தானின் ஒரு பகுதியில் இஸ்லாமிய ஷரீயா சட்டத்தைக் கொண்டு வரும் அளவிற்கு அவர்களின் ஆதிக்கம் வளரவே செய்துள்ளது. தாலிபான்களை ஒட்டுமொத்தமாக அழிக்காதவரை, அமெரிக்காவுக்குச் சாதகமான ஒருங்கிணைந்த ஆப்கானிஸ்தானை ஒருபோதும் உருவாக்க முடியாது என அமெரிக்காவின் முன்னணி உளவு மற்றும் ஆய்வு நிறுவனம் கடந்த இரு மாதங்களுக்கு முன் எச்சரித்திருந்தது. ஆச்சரியமாக, 9/11 தாக்குதலுக்குக் காரணம் எனவும் ஆப்கான் மீது அமெரிக்கா போர் தொடுக்க அவரே காரணம் எனவும் கூறப்பட்ட உசாமா குறித்தோ அல்காயிதா குறித்தோ இப்போது பேச்சே இல்லை! அண்மையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையினை ஒட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 130 பொதுமக்கள் பலியானதாக பெண்டகன் ஒப்புக்கொண்ட மறுநாள் அமெரிக்கக் கூட்டுப்படையினரால் ஆப்கனிஸ்தானில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை நிறுத்த அதிபர் ஹமீத் கர்சாயி வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்தது.அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பிறகு அமெரிக்கப்படையினரால் ஆப்கானில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதலாகும் இது. ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், "இதுபோன்ற இழப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்க அமெரிக்கப் படையினர் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள்; அதே சமயம் தாலிபான்களுக்கு எதிரானப் போரில் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது" என்றார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் எதிர்நோக்கும் கடினமான சூழலைக் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. குறைந்தளவு ஆயுதங்களுடன் தாலிபான்களை எதிர்த்துப் போரிடும் அமெரிக்கப் படையினரின் அல்லல்களைக் கருத்தில் கொண்டு, ஆப்கனில் அரசியல் ரீதியிலான தீர்வைக் எதிர்நோக்கியுள்ளதாக வாஷிங்டன் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் போராளிகளால் ஏற்படும் பாரிய இழப்புகளை மட்டுப்படுத்த நேசநாட்டுப் படைகளையும் பயன்படுத்தும் திட்டமிருப்பதற்கான அறிகுறியையும் காண முடிகிறது.போராளிகளைப் பேச்சுவார்த்தைக்கு உடன்படுத்தும் வகையில் அமெரிக்கக் கூட்டுப்படை தனது ராணுவ பலத்தை உபயோகித்து அதற்கான சூழலை உருவாக்க 100,000 எண்ணிக்கையிலான அமெரிக்கக் கூட்டுப்படைகளை தயாராக வைத்துள்ளது. அவர்களை வைத்துப் போரிடும் முன்னதாக வான்வழித் தாக்குதல்களை அதிகப்படுத்தி தாலிபான்களின் நம்பிக்கையையும் இருப்புகளையும் தகர்க்க வேண்டும்.பொதுமக்களுடன் இரண்டறக் கலந்துள்ள போராளிகளை அடையாளம் காண்பது மிகவும் சிரமம். தாலிபான்கள் போர்களம் போல் ஓரிடத்தில் ஒன்று கூடாமல் பஸ்தூன் போராளிகளைப் போல் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபடுவதால் நிறைய சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வான் வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியாது. இதுபோன்ற எதிர் நடவடிக்கை உத்திகளில் பாரியளவில் பொதுமக்கள் பலியாவார்கள். பொதுமக்கள் பலியானாலும் போராளிகள் முற்றிலும் துடைத்தெறியப்படுவதற்கான முயற்சிகளை நிறுத்த முடியாது. எனினும் முதலில் மக்களின் அபிமானத்தைப் பெறுவது அவசியம்.இதிலிருந்து தாலிபான்களுடன் சமாதானப்பேச்சு நடத்தும் பேச்சுக்கே வாய்ப்பில்லையென அமெரிக்கா திட்டவட்டமாக கோடிட்டுக் காட்டி உள்ளது.அமெரிக்கத் தலைமை இராணுவத் தளபதி டேவிட் பெட்ராஸின் கூற்றுப்படி அமெரிக்கப் படையினருக்குப் போராளிகளையும் பொதுமக்களையும் பகுத்தறியும் செயல்திறன் குறைவாக உள்ளதால், புஷ் நிர்வாகம் இராக்கில் செய்தது போன்று ஒபாமாவும் அதற்கான நடவடிக்கைகளை ஆப்கனில் எடுப்பார் என்றார்.இராக்கைக் காலனியாக்கும் கனவுடன் தவறான உளவு மற்றும் இராணுவத் தகவல்களின் அடிப்படையில் அவசரப்பட்டு போர் தொடுத்து, பதவி முடியும்போது அதிபர் புஷ் காலணியுடன் விடைபெற்றார். அதேபோல் ஒபாமாவும் ஆப்கனிஸ்தான் விசயத்தில் இவர்களின் பேச்சை நம்பிக்கொண்டு மென்மேலும் படைகளை அனுப்பிக் கொண்டிருப்பதால் ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியால் வேலையிழந்த அமெரிக்கர்களும் CHANGE வசனம் பேசிய ஒபாமாவை நோக்கித் தங்களுடைய காலணிகளை CHANGE பண்ணாமலிருந்தால் சரி!
Labels
23/5/09
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.