17/5/09

துபாயில் வெகு சிறப்பாக நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

0 கருத்துகள்

EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்திய சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) கடந்த 15.05.09 வெள்ளியன்று துபாயில் லேண்ட்மார்க் ஹோட்டலில் NRIகளுக்கு ஓட்டுரிமை வழங்குவது பற்றிய கருத்தரங்கை வாகாய் நடத்தியது.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு சரியாக இரவு 8 மணிக்கு துவங்கியது. EIFF தமிழ்நாடு கிளை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்தோடு EIFF அமைப்பை அறிமுகப்படுத்தி அதன் பல்வேறுபட்ட சமூக நலப் பணிகளை விவரித்துக் கூறினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் அவரே.
ஏன் NRI களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்பது குறித்து பல புள்ளிவிவரங்களை அழகுற எடுத்துக் கூறி அடுத்து உரையாற்றினார் EIFF இன் பேச்சாளர் செய்யத் அலீ. NRI கள் இங்கே பல அல்லல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். அவர் தம் துயர் துடைக்கப்படவேண்டுமெனில் அவர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும். அப்பொழுதே Bargaining Power என்கிற நமது உரிமைகளைக் கோரும் அதிகாரம் நமக்குக் கிடைக்கும் என்று தனது உரையில் கூறிய அவர் இது குறித்து தெளிவாகப் புரியும்படி இன்னும் பல கருத்துகளைக் கூறினார்.
அடுத்ததாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மு.மு.க.வின் துணைத்தலைவர் ஹுசைன் பாஷா உரை நிகழ்த்தினார். வளைகுடாவில் மட்டும் சுமார் 45 லட்சம் NRI கள் வாழ்கிறார்கள். இவர்களால் குறைந்தது 4 எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
EIFF இன் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் உமர் பாரூக் (கேரளா) அடுத்து உரை நிகழ்த்தினார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 இல் பிரிவு 19, 20 களில் இந்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்பொழுதே NRI களுக்கு ஓட்டுரிமை சாத்தியப்படும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இன்னொரு சிறப்பு விருந்தினரான ஈமான் அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் அடுத்ததாக உரை நிகழ்த்தினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் வேலூரில் போட்டியிடும் ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் NRI களுக்கு ஓட்டுரிமை வழங்குவது குறித்து குரல் கொடுப்பார் என்று முதுவை ஹிதாயத் தனது உரையில் குறிப்பிட்டார். (அப்துர் ரஹ்மான் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். இன்ஷா அல்லாஹ் அவர் பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் கொடுப்பார் என்று நம்புவோம்.)
அடுத்ததாக மற்றொரு சிறப்பு விருந்தினரான ''கலீபாக்களின் ஆட்சி'' (இலக்கியச்சோலை வெளியீடு) என்ற நூலின் ஆசிரியரும், கட்டடக்கலை நிபுணருமான ஹபீப் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். EIFF நண்பர்களை தனக்கு நீண்ட நாட்களாக தெரியும் என்றும், அவர்கள் எடுத்த காரியத்தை கச்சிதமாக முடிப்பவர்கள் என்றும் தன் உரையில் குறிப்பிட்ட அவர், NRI களுக்கு ஓட்டுரிமை வழங்குவதால் எவ்வளவு பலன்கள் உள்ளன என்று விவரித்து கூறினார்.
யு.எ.இ. தமிழ் சங்கத் தலைவர் ரமேஷ் விஸ்வநாத் அவர்களை நாம் விழாவுக்கு அழைத்திருந்தோம். வரும் வழியில் அவரது வாகனம் சிறு விபத்துக்குள்ளானதால் - (யாருக்கும் ஆபத்து இல்லை) காவல் நிலையம் சென்று அங்கேயே தாமதமாகி விட்டதால் - அவரால் விழாவுக்கு வர முடியவில்லை. இருந்தும் அங்கிருந்து விழாக் குழுவினருக்கு message அனுப்பி தான் பேச எண்ணியிருந்த கருத்துகளை விழாவில் பதிவு செய்தார்.
அடுத்ததாக சங்கமம் டிவியின் நிர்வாக இயக்குனர் கலையன்பன் அவர்கள் உரை நிகழ்த்தினார். EIFF இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்த நேர்த்தியையும், EIFF செயல்வீரர்களின் கட்டுப்பாட்டையும் வெகுவாகப் பாராட்டி தனது உரையில் குறிப்பிட்ட அவர், EIFF நிச்சயமாக NRI களுக்கு ஒட்டுரிமையைப் பெற்றுத் தரும் என்று கூறினார். அத்தோடு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார் அவர். அவருக்கு பொறியாளர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நினைவுப் பரிசை வழங்கினார்.அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆர்வமுடன் பலர் மேடைக்கு வந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இறுதியாக பொறியாளர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். EIFF இந்தப் பிரசாரப் பணியை மூன்று கட்டங்களாக நடத்தவிருக்கிறது. முதல் கட்டமாக பிரசாரக் கூட்டங்களை வளைகுடா நாடுகளில் நடத்தி வருகிறது. இரண்டாம் கட்டமாக புதிய அரசு அமைந்தவுடன் அதன் கவனத்தை ஈர்க்கும் விதமாக மும்பை, சென்னை, கொல்கத்தா, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாநாடுகளை நடத்தவிருக்கிறது. அரசு செவி சாய்க்கவில்லை எனில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை எனில் மூன்றாம் கட்டமாக சட்ட ரீதியான முயற்சிகளில் EIFF இறங்கும். உச்ச, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழுவை உருவாக்கி அதன் மூலமாக இறுதி வரை EIFF போராடும் என்று அவர் EIFF இன் போராட்ட வழிமுறைகளை விளக்கமாக குறிப்பிட்டார்.
சகோதரர் Fajludheen அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கலந்துகொண்டோர் நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துகளை கொடுக்கப்பட்ட Feedback Form இல் பதிவு செய்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.