24/6/09

குவான்டனாமோ சிறைவாசியை விடுதலைச்செய்ய அமெரிக்க நீதி மன்றம் உத்தரவு.

அப்த் அல் ரஹீம் அப்துல் ரஸ்ஸாக் என்ற சிரியா நாட்டைச்சார்ந்தவரை 2002-இல் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் ஆஃப்கானிஸ்தானிலுள்ள சிறையில் வைத்து கைதுச்செய்து குவான்டனாமோ சிறையில் அடைத்தது.அதற்கு முன் இவர் 18 மாதங்களாக தலிபான்களால் மேற்கத்திய நாடுகளின் உளவாளியாக கருதப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்த அப்த் அல் ரஸ்ஸாக்கை கைதுச்செய்த ராணுவம் அவருக்கு அல்காய்தாவுடன் தொடர்பு நீடிப்பதாக கூறி கைதுச்செய்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான சித்தரவதையும் செய்தது.இந் நிலையில் அமெரிக்காவிலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்று இதுத்தொடர்பாக அளித்த 13 பக்க தீர்ப்பில்,"எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரைக் கைதுச்செய்துள்ளனர். அல்காய்தாவுடன் தொடர்புள்ளவர் என்று கூறுகின்றீர்கள் ஆனால் அவரோ தாலிபான்களால் சிறைபிடிக்கப்பட்டவர். இது கடும் கண்டனத்திற்குரியது. கடுமையாக சித்தரவதைச்செய்ததால் அவர் குற்றவாளியென்று பொய்யாக ஒப்புக்கொண்டுள்ளார்"என நீதிபதி ரிசார்ட் லியோன் கூறினார்.

அப்த் அல் ரஸ்ஸாக்கின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஸ்டீவன் வாக்ஸ் கூறுகையில் "இந்த தீர்ப்பு மேலும் ஒரு குற்றமற்றவரை குவான்டனாமாவில் அநியாயமாக சிறைவைக்கப்பட்டதை காட்டுகிறது".என்றார்.தற்ப்போது 229 கைதிகள் குவான்டனாமோ சிறையில் உள்ளனர்.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அடுத்த வருடம் துவக்கத்தில் குவான்டனாமோ சிறை மூடப்படும் என அறிவித்துள்ளார்.

செய்தி ஆதாரம்:அல் ஜசீரா இணைய தளம்.