24/6/09

சென்னை : கத்தர் தொழில் அதிபர் விடுதலை!

அல்ஜீரியாவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் கைது செய்யப்பட்ட கத்தார் நாட்டு தொழில் அதிபரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு மலேசியாவில் இருந்து கடந்த 18-ந் தேதி வந்த விமானத்தில் பயணித்தவர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்த போது கத்தார் நாட்டு குடியுரிமை பெற்ற தொழில் அதிபர் அப்பாசி சலீம் (42) என்பவரின் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.அதில் அல்ஜீரியாவில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் இவரை இன்டர்போல் போலீசார் தேடுவதை அறிந்தனர். இதையடுத்து சர்வதேச தீவிரவாதியாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய உளவுப்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சென்னை விமான நிலைய காவலர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். விமான நிலைய காவல் ஆய்வாளர் முகிலன், துணை ஆய்வாளர் சிவா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
எனது தந்தை மதானி அல்ஜீரியா நாட்டில் அரசியல் கட்சி தலைவராக உள்ளார். அங்கு இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடினார். கடந்த 1992-ம் ஆண்டு குண்டு வெடித்தது. இந்த வழக்கில் எனது தந்தையை சிறையில் அடைத்தனர். எங்கள் குடும்பத்தினர் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்று அங்கு தங்கினோம். பின்னர் கத்தாரில் அடைக்கலம் அடைந்தோம். நான் தற்போது சோலார் மின்சாரம் தயாரிப்பு தொடர்பாக தொழில் செய்து வருகிறேன். இது பற்றி உலகம் முழுவதும் ஆலோசனை வழங்கி இந்த தொழிலை விரிவுப்படுத்தி வருகிறேன். நான் தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது. என்னை குற்றவாளிகளுடன் இணைத்துவிடாதீர்கள் என்று அவர் வாக்கு மூலம் அளித்தார்.
பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அப்பாசி சலீமை காவலர்கள் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அப்பாசி சலீம் கைது செய்யப்பட்ட விவரம் இன்டர்போல் போலீசுக்கு தகவல் தரப்பட்டது. இன்டர்போல் போலீசார் அல்ஜீரிய நாட்டுக்கு தகவல் தந்தனர்.ஆனால் தற்போது விசாரணைக்கு அப்பாசி சலீம் தேவையில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் அப்பாசி சலீம் முன்னிலைப் படுத்தப் பட்டார். விமான நிலைய காவலர்கள் இவர் விசாரணைக்கு தேவையில்லை என்று அல்ஜீரியா நாட்டு காவல்துறை தெரிவித்து விட்டனர். எனவே இவர் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அப்பாசி சலீமை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு சரவணன் உத்தரவிட்டார்.

நன்றி : இந்தநேரம்