20/6/09

தாக்கரேவுக்கு மூச்சுத்திணறல் - ஓடி வந்து காப்பாற்றிய முஸ்லீம் டாக்டர்கள்!


மும்பை : கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு, இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்து அவரை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளனர்.

சிவசேனாவின் முஸ்லீம் துவேஷப் போக்கு அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வியாழக்கிழமையன்று கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இரு முஸ்லீம் டாக்டர்கள் விரைந்து வந்து தாக்கரேவுக்கு சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் லீலாவதி மருத்துவமனைக்குத் தகவல் போனது. இதையடுத்து அங்கிருந்து டாக்டர்கள் ஜலீல் பர்கர், சமத் அன்சாரி ஆகியோர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

இதுகுறித்து டாக்டர் பர்கர் கூறுகையில், பால் தாக்கரேவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நான் அவரது வீட்டுக்கு தினசரி சென்று பார்த்து கண்காணித்து வருகிறேன்.

வியாழக்கிழமையன்றும் நான் போயிருந்தபோது நன்றாகத்தான் இருந்தார். ஆனால் இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நானும் டாக்டர் சமத்தும் வீட்டுக்கு விரைந்தோம். அவருக்கு ரத்த அழுத்தம் ஏறியிருந்தது. இதயத் துடிப்பும் தாறுமாறாக இருந்தது. ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது.

உடனடியாக அவருக்கு சில ஊசிகளைப் போட்டோம். பின்னர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம் என்றார்.

தாக்கரே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தகவலை அறிந்து அவரது மகன் உத்தவ், மருமகள் ராஷ்மி ஆகியோர் விரைந்து வந்தனர். தாக்கரேவின் குடும்பத்தினரும் வந்தனர். ஆனால் மருமகனும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே மட்டும் வரவில்லை.

நன்றி : thatsthamil