25/7/09

ஆஃப்கான் போருக்கு பிரிட்டன் பொதுமக்கள் எதிர்ப்பு:கருத்துக்கணிப்பில் தகவல்

0 கருத்துகள்
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கத்தலைமையில் தாக்குதல் நடத்திவரும் இங்கிலாந்து உள்ளிட்ட நேசநாட்டு படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள சூழலில் பிரிட்டீஷ் படையினர் உடனடியாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவேண்டும் என பெரும்பாலான பிரிட்டன் பொதுமக்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் தலிபான்களின் தாக்குதலில் பிரிட்டனைச்சார்ந்த படைவீரகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்புணர்வை உருவாக்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் நடத்திவரும் தலிபான்களுக்கு எதிரான போரைப்பற்றி பிரிட்டன் பொதுமக்களிடம் சர்வதேச அளவிலான இரண்டு நிறுவனங்கள் கருத்துக்களை கேட்டது.கனடாவைச்சார்ந்த ஆங்கஸ் ரீட் ரிசர்ச் சென்டர் நடத்திய கணிப்பில் 53 சதவீத பிரிட்டீஷ் மக்கள் தங்கள் நாடு ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,"ஏன் பிரிட்டன் ஒரு இறையாண்மையுடைய நாட்டை ஆக்கிரமித்துள்ளது என்பதைப்பற்றி எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை".என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவைச்சார்ந்த பீவ் ரிசர்ச் சென்டர் நடத்திய ஆய்வில் 48 சதவீத பிரிட்டீஷ் மக்கள் பிரிட்டன் உடனே ஆப்கானிலிருந்து வாபஸ் பெறவேண்டும் எனக்கூறியுள்ளனர். 46 சதவீதம்பேர் பிரிட்டன் தொடர்ந்து ராணுவத்தை ஆப்கானில் நிறுத்த ஆதரவுத்தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் 51 சதவீத பிரிட்டீஷ் மக்கள் மேலும் கூடுதல் ராணுவத்தினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டீஷ் பாதுகாப்புச்செயலர் பாப் ஐன்ஸ்வர்த் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில் ஆப்கானில் இறந்துப்போன பிரிட்டன் படையினருக்கு பதிலாக மேலும் 125 பிரிட்டீஷ் ராணுவப்படையினர் ஆப்கானுக்கு அனுப்பப்படுவர் என்றார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புப்படையினர் ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை 186 பிரிட்டீஷ் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பிரிட்டீஷ் படையினர் எண்ணிக்கை 9 ஆயிரம். இதில் பெரும்பாலான ராணுவத்தினர் ஆப்கானின் பிரச்சனைக்குரிய‌ தெற்கு மகாணமான ஹெல்மாந்தில் நடைபெறும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source:Press Tv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.