ஏற்கனவே அணுசக்தி சம்பந்தமாக அமெரிக்காவிற்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தற்ப்போது அமெரிக்க வெளியுறவுச்செயலர் ஹிலாரி கிளிண்டனின் சமீபத்திய இந்திய சுற்றுபயணத்தின் போது இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமுன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிப்பதற்கு கூட துணியாமல் அவசர அவசரமாக கையெழுத்திட்டதின் நோக்கம் என்ன என்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் எந்த பதிலையும் காணோம்.
ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான் இந்தியாவிற்கு அமெரிக்காவால் விற்கப்படும் அணுசக்தித்தொடர்பான கருவிகள் எந்த பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டதோ அந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுச்செய்யும் உரிமையை அமெரிக்காவிற்கு அளிப்பது. இதன் மூலம் இந்திய ராணுவ தளங்கள் மற்றும் அணுமின் நிலையங்களுக்கு அமெரிக்க குழு நேரடியாக வந்து ஆய்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் போது விட்டுக்கொடுக்கப்படாத உரிமை தற்ப்போது கொடுக்கப்பட்டதன் மூலம் இந்தியா தனது தனித்தன்மையை இழந்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கட்சி வேறுபாடின்றி மத்திய அரசின் இந்த தான்தோன்றித்தனமான போக்கை கடுமையாக விமர்சித்து அவைகளிலிருந்து வெளி நடப்புச்செய்தன. முன்னதாக அவையில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், "பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் சூழலில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை அரசு மறைக்க முயல்கிறது. அமெரிக்காவுடன் கைக்கோர்ப்பதற்கு முன்பாக ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு ஏற்ப்பட்ட நிலையை நினைத்து பார்க்கவேண்டும். அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க மறுத்தால் சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட கதிதான் மற்றவர்களுக்கு ஏற்படும். இதை உலகம் முழுவதற்கும் செய்தியாக கூற விரும்புகிறேன். "இவ்வாறு கூறினார். அமெரிக்காவுடனான இந்தியாவின் கூடா நட்பு இனி என்னென்ன விபரீதங்களை உருவாக்கப்போகிறதோ இறைவனுக்கே வெளிச்சம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.