சென்னை: சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
சென்னை ராயபுரம் கெளஸ் மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம் என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளை கட்டியது. பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, வக்பு வாரியத்துக்கு குடிசை மாற்று வாரியத்தால் 276 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதாவது, ராயபுரத்தில் 100 குடியிருப்புகள், கண்ணகி நகரில் 176 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடுகள் முஸ்லிம் சமுதாயத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு குறைந்த வாடகையில் (மாதம் ரூ.250 வாடகை), ரூ. 1,000 முன் பணம் பெற்றுக் கொண்டு வழங்கப்படும்.
இந்த வீடுகள் மசூதிகளின் இமாம்கள், மோதினார்கள், வேலையற்ற உலமாக்கள், விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தலா 10 சதவீதமும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்படும்.
இதற்காக கடந்த 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதன் பின்னர் இந்த விண்ணப்பங்கள் தனி குழுக்கள் மூலமாக சரி பார்க்கப்படும். கடைசியில் குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் வக்பு வாரியம் மூலமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மருத்துவம், பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக நலக்கூடங்கள் தொடங்கப்படும். பெண்களுக்காக பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும் என்றார்.
thatstamil
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.