இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபியில் 13.08.09 வியாழன் அன்று இரவு 8 மணியளவில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.
Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கிற்கு வந்திருந்தோரை சகோதரர் தஸ்தகீர் வரவேற்றார். EIFF ன் பல்வேறு சமூக நலப் பணிகள் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார் சகோதரர் முஹம்மது கனி. ''முஸ்லிம் இந்தியா'' என்ற தலைப்பில் 800 ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியில் இந்தியா பெற்றிருந்த செழிப்பை காட்சிப் படுத்தும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. இதுவே நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகவும் அமைந்தது. பின்னர் ''முஸ்லிம்கள் தலைமையேற்று நடத்திய இந்திய விடுதலைப் போர்'' என்ற தலைப்பில் சகோதரர் செய்யத் அலீ சிறப்புரையாற்றினார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்தை வரிசையாக பட்டியல் போட்டு நினைவு கூர்ந்த அவர், ''தன் வரலாறு தெரியாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது'' என்ற அமெரிக்க மாவீரன் மால்கம் X ன் பொன்மொழியை சுட்டிக்காட்டினார்.
1498ல் இந்திய மண்ணை ஆக்கிரமித்த போர்த்துகீசியர்களை எதிர்த்து வெஞ்சமரிட்ட குஞ்சாலி மரைக்கார்கள் முதல் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஹைதர் அலீ, திப்பு சுல்தான் போன்ற மாவீரர்களின் வரலாறுகளை எடுத்துரைத்தார். நேதாஜி சிங்கப்பூரில் வைத்து இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவித்தார். ஆனால் செய்யத் அஹ்மத் ஷகீத் ரேபரலி அவர்கள் 1850களில் இந்தியாவில் பாட்னாவில் வைத்து இது தாருல் இஸ்லாம் என்று அறிவித்து தனது இறுதி மூச்சு வரை போராடினார் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இனாயத் அலீ, வினாயத் அலீ, அஹமதுல்லாஹ் ஷா, கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா சபார், கிழ்ர் சுல்தான், பேகம் ஹழ்ரத் மகல், அஸ்மதுல்லா கான், ஹழ்ரத் முஆனி, மாப்பிள்ளா முஸ்லிம்கள், மௌலானா முஹம்மது அலீ என்று ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்களின் வரலாறுகளை அழகுற எடுத்துரைத்தார் செய்யத் அலீ.
அதன் பின்னர் ''நமது பணிகள்'' என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது கனி அவர்கள் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா செய்து வரும் அரும் பணிகள் குறித்து உரையாற்றினார். இறுதியில் இந்திய சமூக மாற்றத்தில் நமது பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று முடிவுரை ஆற்றினார் சகோதரர் அனஸ். நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.