15/10/09

இனி முதலில் அணு ஆயுத தாக்குதல்: ரஷ்யா

0 கருத்துகள்
மாஸ்கோ: தன்னை யாராவது தாக்குவார்கள் என நினைத்தால் அந்த நாட்டின் மீது முன்னெச்சரிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது என்ற முடிவுக்கு ரஷ்யா வந்துள்ளது.
தனது பாதுகாப்பு குறித்த கொள்கையில் ரஷ்யா செய்யவுள்ள இந்த மாபெரும் மாற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தி, எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்துள்ள ரஷ்யா தனது பாதுகாப்புக் கொள்கையில் இதற்கான திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.

இந்த திருத்தத்தை செய்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அதை அதிபர் டிமிட்ரி மெத்வதேவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலே பட்ருஷே உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், இப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ரஷ்யாவுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பாதுகாப்புக் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் தேவையில்லாமல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபடாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்துவோம் என்றார்.

விளாடிமிர் புடின் ரஷய அதிபராக இருக்கும்போது தான் இந்தத் திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் ரஷ்ய பிரதமராகிவிட்டார். ஆனாலும், அவர் நியமித்த மெத்வதேவ் தான் அதிபராக உள்ளார். இப்போதும் நாட்டை வழி நடத்துவது புடின் தான் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ரஷ்ய அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் தான் புடின் அந்தப் பதவியிலிருந்து விலகினார். ஆனால், அவர் பதவி விலகும்போதும் அவருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது. இப்போதும் உள்ளது.
இந் நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

அரசு முறைப் பயணமாக ரஷ்யா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவக் கொள்கையில் இடம் இல்லை என்று மட்டும் கூறினார்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளும் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதி்ல்லை என்ற கொள்கை உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
source:thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.