31/5/09

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார்.

0 கருத்துகள்


பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார். 75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு இறந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ள கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வாசகர்கள் உண்டு.


1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காட்டில் நாலப்பாட்டு குடும்பத்தில் பிறந்த கமலாசுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா. தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். பால்யகால ஸ்மரணகள், நிர்மாதளம் பூத்தகாலம், பக்ஷியுடைய மரணம், யா அல்லாஹ், என்ற கதா என்பவை இவருடைய பிரசித்திப்பெற்ற நாவல்கள். கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார்.


அவருக்கு 65 வயதானபோது 1999 இல் அவர் இஸ்லாம் மதத்தை தழுவினார். மாதவிக்குட்டி என்ற தனது பெயரையும் கமலா சுரய்யா என்று மாற்றிக் கொண்டார்.
தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது. இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்த பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன!
சகோதரி கமலா சுரய்யா அவர்கள்உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன. தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

அவரின் இறுதி மரியாதைகளைக் கேரளத்தில் வைத்து நிறைவேற்றுவதற்காக அவரது உடல் கொச்சி கொண்டு வரப்படும் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.