31/5/09

அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தால் - (ஈரான்-இந்தியா) எரிவாயு திட்டம் இறுதி முடிவு எடுக்கமுடியவில்லை

0 கருத்துகள்

ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்தில் சேருவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்று பெட்ரோலிய துறை உயர் அதிகாரி தெரிவித்தார். ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டுவரும் திட்டம் குறித்து கடந்த இரண்டு வருடங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதலில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அடுத்தாக பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டுவருவதற்கு, இந்தியா பாகிஸ்தானுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பற்றி பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை. இந்நிலையில் நேற்று ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை உயர் அதிகாரி கூறுகையில், இந்த திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறவில்லை. இதில் சேருவதற்கு முன் சில விளக்கங்கள் பெறேவண்டியதுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த திட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல், இந்தியா கடந்த இரண்டு வருடங்களாக புறக்கணித்து வருகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால், இந்தியா ஈரானுடனான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை புறக்கணிக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. அத்துடன் அமெரிக்க நிறுவனம் அஜர்பெய்ஜானில் இருந்து இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவும் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை இந்தியா புறக்கணிப்பதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே 25 ல் ஈரான் தலைநகர் டெக்ரானில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஈரான் அதிபர் முகமது அகாமித், பாகிஸ்தான் அதிபர் அஸிப் அலி ஜர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ஈரான்-பாகிஸ்தானுக்கும் இடையே, இயற்கை எரிவாயு கொண்டுவரும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்படி ஈரானில் இருந்து ஆரம்பகட்டமாக தினசரி 30 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அதிகரித்து தினசரி 60 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்படும். இதற்காக பெர்ஷியன் வளைகுடாவில் தெற்கு பார்ஸ் எண்ணெய் துரப்பண பகுதியில் இருந்து, 2,100 கி.மீ குழாய் அமைக்கப்படும். இந்தியா பின்னர் விரும்பினால், இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலையில் ஈரான் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.