20/6/09

குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு மசோதாவை திருப்பி அனுப்ப மத்திய மந்திரி சபை தீர்மானம்

கடுமையான பிரிவுகளைகொண்ட குஜராத் அரசின் பயங்கரவாத சட்ட மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவராவிட்டால் அதை அங்கீகரிக்க முடியாது என்று மத்திய மந்திரி சபை தீர்மானித்திருக்கிறது.இது இரண்டாவது முறையாக மத்திய அரசு இந்த சட்டத்தை திருப்பி அனுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் பெயர் குஜராத் திட்டமிட்ட குற்றத்தடுப்பு மசோதா(GUJCOCA-GUJARAT CONTROL OF ORGANISED CRIME ACT).இதில் 3 திருத்தங்களை செய்தால் மட்டுமே இதனை ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்ப முடியும் என கூறிவிட்டது மத்திய அரசு.

இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்," தற்போது குஜராத் அரசு சமர்ப்பித்துள்ள மசோதாவில் - ஒரு குற்றவாளி, போலீஸ் அதிகாரி முன்பு அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை கோர்ட் ஏற்க முடியும் என்ற அம்சம் உள்ளது. இதை ஏற்க முடியாது.
அதேபோல, அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் கோர்ட்டால் ஜாமீன் வழங்க முடியாது என்று இன்னொரு அம்சம் உள்ளது. கோர்ட்டுக்குத்தான் ஜாமீன் வழங்குவதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும். அரசு வக்கீலுக்கு அது இருக்க முடியாது. இதையும் திருத்த வேண்டும்.

அதேபோல இன்னொரு திருத்தத்தையும் நாங்கள் தெரிவித்துள்ளோம்”. 3-ஆவது பிரிவு எது என்று கூற சிதம்பரம் மறுத்துவிட்டார். “இந்த 3 திருத்தங்களையும் குஜராத் அரசு மேற்கொண்டால், இந்த மசோதாவை மத்திய அரசு குடியரசு் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும்” என்றார் சிதம்பரம்.