20/6/09

தாலிபான்களைப் பேட்டி எடுத்ததற்காக அல் ஜஸீரா நிருபர்கள் கைது!


தாலிபான் கமாண்டர்களைப் பேட்டி எடுத்த இரண்டு அல் ஜஸீரா தொலைகாட்சி நிருபர்களை ஆப்கானிஸ்தான் ரகசிய காவல்துறை கைது செய்துள்ளது. அல் ஜஸீராவின் அரபி மற்றும் ஆங்கில தொலைகாட்சி அலைவரிசைகளுக்காக ஆப்கானிஸ்தான் பகுதி நிருபர்களாக வேலை செய்யும் கைஸ் அஸீமி மற்றும் ஹந்துல்லா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று காவல்துறை கைது செய்த இவர்களைக் குறித்து அதன் பின்னர் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை எனவும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் அல் ஜஸீரா அறிவித்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள குந்துஸ் பகுதியில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் குறித்த விவரமான செய்தியைக் கடந்த வாரம் அல் ஜஸீரா ஒளிபரப்பியிருந்தது. அல் ஜஸீரா வெளியிட்ட இச்செய்தியே ஆப்கானிஸ்தான் அரசினல் ஜஸீரா பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்குக் காரணம் என கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அல் ஜஸீரா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயியைத் தொடர்பு கொண்டப்பின்னரும் எவ்வித அனுகூலமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என அல் ஜஸீரா பிரமுகர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதே சமயம் பத்திரிக்கையாளர்களைக் கைது செய்த விவரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இதுவரை தயாராகவில்லை. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், ஊடகங்களுக்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்கானிஸ்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது. தாலிபானின் வளர்ச்சி முக்கியமான தேர்தல் பிரச்சார விஷயமாக மாறியிருக்கும் இந்நிலையில், தாலிபான்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
சுதந்திரமாக செயல்பட வேண்டிய பத்திரிக்கையாளர்கள் மீது ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் அரசின் சுதந்திர செயல்பாடுகள் மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.