20/6/09

இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்த ஷாருக் கான் மீது வழக்கு!


பாலிவுட் நடிகர் ஷாருக் கான் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஷாருக் கான் கூறியுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக மும்பை பந்தரா காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் புகார் ஷாருக் கான், கட்டுரை ஆசிரியர் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர் ஆகியோர் மீது அளிக்கப் பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
டைம் அன்ட் ஸ்டைல் பத்திரிகையின் ஜூலை மாத இதழில் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் நபியைப் பற்றி ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அவர் கூறியிருப்பதாகவும் புகார் அளித்த காலித் பாபு குரேஸி கூறியுள்ளார்.ஷாருக் மற்றும் இருவர் மீதான இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்தல்) மற்றும் 34 (ஒரே நோக்கத்தில் பலர் ஒன்றிணைந்து செயல்படுதல்) ஆகியவற்றின் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் காவல் துறை ஆய்வாளர் ஜார்ஜ் கூறினார்.