21/6/09

சிடியில் உள்ளது வருண் காந்தியின் குரல்தான்- ஆய்வு முடிவு!

லக்னோ: பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக கூறி சமர்ப்பிக்கப்பட்ட வருண் காந்தியின் பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது, வருண் காந்தியின் குரல்தான் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிலிபித்தில் பேசிய வருண் காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் துவேஷமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறை சென்ற அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலையானார். பின்னர் அவர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கும் தள்ளுபடியானது.
இந்த நிலையில் பிலிபித்தில் தான் பேசிய பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது தனது குரலே அல்ல, அதை திரித்து தயாரித்துள்ளனர் என்று கூறியிருந்தார் வருண் காந்தி. இதையடுத்து சிடியில் உள்ள பேச்சு வருண் காந்தியின் குரல்தானா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த சோதனையில் சிடியில் உள்ள குரலும், வருண் காந்தியின் குரலும் ஒத்துப் போவதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக உ.பி. போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சண்டிகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இந்த குரல் பரிசோதனை நடந்தது. பிலிபித் மற்றும் தேஷ்நகர் ஆகிய இரு இடங்களில் வருண் காந்தி பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்களையும், வருண் காந்தியின் குரலையும் சோதனை செய்ததில் அவை ஒத்துப் போவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை அடிப்படையாக வைத்து விரைவில் வருண் காந்தி மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யப் போவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஆனால் போலீஸாரின் இந்தக் கூற்றை ஏற்க முடியாது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
நன்றி :thatstamil