25/6/09

சித்திரவதை எதிர்ப்பு தின சிறப்புச்செய்திகள் -ஏகாதிபத்தியத்தின் பலியாடுகள்

பக்ராம் to குவான்டனாமோ சித்திரவதைக்கூடத்தில் அவதிப்பட்ட முஹம்மது நாஸிம்.
ஒரு அமைதியான கோடைகால இரவு. 30 வயதான முஹம்மது நாஸிம் அந்த இரவின் குழுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுது அந்த அமைதியைக் கெடுக்கும்விதமாக திடீரென வீட்டைச்சுற்றிலும் துப்பாக்கிச்சத்தமும் பூட்டுகளின் ஒலியும் மனிதக்குரல்களும் கேட்டது. திடீரென அந்த பழைய வீட்டின் கதவு திறக்கப்பட்டது. வெளியே அமெரிக்க ராணுவம் நாஸிமின் வீட்டை சுற்றி வளைத்திருந்தது. அமெரிக்க ராணுவ வீரன் ஒருவன் நாஸிமிடம் கேட்டான் ,"உஸாமா பின் லேடனை தெரியுமா?" என்று "ஆம்,ரேடியோவில் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று பதில் கூறினார் நாஸிம்.
அமெரிக்க ராணுவம் நாஸிம் தலிபானைச்சார்ந்தவன் என குற்றம் சாட்டியது. இதனை நாஸிம் மறுத்தபோதும் அமெரிக்கர்கள் அதனை நம்பவில்லை. நாஸிம் கைதுச்செய்யப்பட்டு காபூலுக்கு வெளியே உள்ள பக்ராமுக்குக்கொண்டு போகப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 5 மாதங்கள் அந்த சிறையிலேயே அவர் கழித்தார்.
"வாழ்க்கை கடினமானது” என்று நாஸிம் கூறுகிறார். அவர்கள் எங்களை உதைத்தார்கள், நாங்கள் இருந்த நாற்காலியையும் உதைத்தார்கள். திறந்த வெளியில் நாங்கள் குளிக்க வைக்கப்பட்டோம். எங்களுக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை. அமெரிக்க விசாரணை அதிகாரிகள் அவர்கள் விரும்பியது எங்களிடமிருந்து கிடைக்காததால் கைதிகளின் தாடியை மழித்தார்கள். பக்ராமில் நாஸிமின் சிறை வாழ்க்கை 5 மாதங்களில் முடிந்தபோதும், அவர் விடுதலை பெற 4 ஆண்டுகள் ஆகியது.
ஆம், பக்ராமிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட நாஸிம் கியூபாவிலுள்ள குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டார். 2001-இல் ஆஃப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப்பின்னால் நாஸிம் உட்பட ஆயிரக்கணக்கான ஆஃப்கானிகள் அமெரிக்க ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 4 வருட சிறைவாசம் தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாக நாஸிம் வேதனையோடு கூறுகிறார்.
அவர்கள் சிறைக்கைதிகள் விசாரணையின்போது சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை கண்டறிய மின்சார இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். நான் பீதி வயப்பட்டேன். எனக்கும் மின் அதிர்ச்சி சித்திரவதைச் செய்வார்களோ என்று. ஆனால் அவர்கள் எனக்கு அதனை அளிக்கவில்லை. ஆஃப்கானிகள் ஒரு போரிலிருந்து அடுத்த போர்வரை தங்களது உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையைஓட்டுகிறார்கள் என்று நாஸிம் கூறுகிறார்.
பக்ராம் சிறைக்குக்கொண்டுவரப்பட்டபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட எண்ணை படிக்க அவருக்குத்தெரியாததால் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அவருக்கு தண்டனை அளித்து அதனை படிக்கவைத்ததாக கூறுகிறார். உங்களுடைய சிறைவாழ்வுக்கு பிறகு அமெரிக்காப்பற்றிய மனோநிலை எப்படியிருக்கிறது என்றுக்கேட்டதற்கு நாஸிம் கூறுகிறார், "அமெரிக்க ராணுவத்தை நான் வெறுக்கிறேன், ஆனால் அந்த நாட்டுமக்களை நேசிக்கிறேன்". நாஸிம் இந்த பேட்டியை பி.பி.சிக்கு தொலைபேசி வழியாக அளித்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது பின்னணியில் குழந்தைகளின் குரல் கேட்டது. குழந்தைகளை குறித்து விசாரித்தபொழுது நாஸிம் கூறினார், "குழந்தைகளிடம் பக்ராம், குவான்டனாமோ பற்றிக்கூறும்பொழுது பீதியுடன் அந்த நிகழ்வைக்கேட்கிறார்கள். எனது மனைவி எனது குழந்தைகள் இரவில் தூங்காவிட்டால் பக்ராம், குவான்டனாமோ சிறைக்கு அமெரிக்கர்கள் கொண்டுச் சென்றுவிடுவார்கள் என பயமுறுத்தி தூங்கவைப்பாள்."
News Source: http://news.bbc.co.uk/2/hi/south_asia/8116616.stm
Tamil translation:Muslimeen