11/6/09

மோடி மீதான விசாரணையைக் கண்காணிக்க எஸ்.ஐ.டி தலைவர் குஜராத் வருகை!

குஜராத் இனப்படுகொலையில் முதலமைச்சர் நரேந்திர மோடி உட்பட உள்ள 63 பேருடைய தொடர்பைக் குறித்த விசாரணையின் முன்னேற்றத்தைக் குறித்து கண்காணிக்க, எஸ்.ஐ.டி யின் தலைவர் ஆர்.கெ.ராகவன் அஹ்மதாபாத் சென்றடைந்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பல அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள், துறைசார்ந்த உயரதிகாரிகள் ஆகியோருக்குக் குஜராத் இனப்படுகொலை சம்பவத்தில் மிகுந்த தொடர்பு உண்டு எனவும் அவர்களின் உதவியுடனே அச்சம்பவம் நடந்தேறியதாகவும் ஆகவே அவர்களின் தொடர்பைக் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி அளிக்கப்பட்ட புகாரின் மீது மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இப்படுகொலையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி சகியா ஜாப்ரி இப்புகாரைச் சமர்ப்பித்திருந்தார்.
இவ்விசாராணையின் நிலையினைக் குறித்துக் கண்காணிக்க அஹமதாபாத் வந்து சேர்ந்த ஆர்.கெ. ராகவன், குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரியும் எஸ்.ஐ.டியின் உறுப்பினர்களுமான ஆஷிஷ் பாட்டியா, கீதா ஜோஹ்ரி ஆகியோருடன் வழக்கு சம்பந்தமான விஷயங்களைக் கலந்தாலோசித்தார்.
நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு விசாரணையைத் தடை செய்ய வேண்டும் எனவும் சகியாவின் புகாரில் கூறப்பட்டுள்ள அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் எஸ்.ஐ.டி கைது செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஹீராபாய் மலிவத் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவினைக் குறித்தும் ராகவன் ஆலோசனை நடத்தினார்.