24/6/09

டாலர் மற்றும் யுரோக்கு மாற்றாக புதிய நாணயம் வெளியிட GCC நாடுகள் திட்டம்



வளைகுடாப் பகுதியில் இருக்கும் எண்ணெய்வளம் மிக்க அரபு நாடுகள் தங்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல ஒரே நாணயம் பயன்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வரும் அதேவேளையில் இந்நாணயத்துக்கான பெயரிடுவதில் கிட்டத்தட்ட உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இச்செய்தி உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், புதிய வளைகுடா நாணயம் வளைகுடா தினார் என்று பெயரிடப்படலாம்.



எண்ணெய்வளம் மிக்க வளைகுடா நாடுகளான ஒமான், அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா நாடுகள் தங்களுக்குள் GCCஎனப்படும் வளைகுடா ஒன்றியத்தை அமைத்துத் தங்களுக்குள் வணிக, குடியுரிமை, தொழில் உரிமப் பிரச்னைகளை ஒருமித்துக் கையாண்டு அதில் குறிப்பிடத் தக்க வெற்றியும் ஈட்டி வருகின்றன. இருப்பினும் இந்நாடுகள் தங்களுக்குள் தனித்தனியான நாணயங்களைப் பயன்படுத்தி வருவதால், அவற்றில் ஒன்றை இன்னொன்றுக்கு மாற்றும் போது ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களை இந்நாடுகளின் குடிமக்களும், இந்நாடுகளுக்கு பணிக்காக வந்த வெளிநாட்டோரும் சந்திக்கின்றர்.



ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தங்களுக்குள் யூரோ எனப்படும் ஒரே நாணயத்தை அமைத்து அதன் மூலம் வணிகத்தில் பெரும் நன்மைகள் ஈட்டி வருவதால் அதே போல ஓர் ஒருமித்த நாணயத்தை GCC நாடுகள் தமக்குள் அமைத்துக் கொள்ள எண்ணி ஓர் முன்வரைவையும் வெளியிட்டன. முதலில் ஒமான் நாடு இந்த நாணயத்தில் பங்கு பெறத் தன்னால் இயலாது என விலகிக் கொண்டது.


2010க்குள் இந்நாணயம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த நாணயத்துக்கான ஆணையத் தலைமையகத்தினை நிறுவும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமீரகமும் இந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இருப்பினும் மீதமுள்ள நாடுகளில் கத்தாரும், பஹ்ரைனும் தங்களின் ஆதரவை சவூதி அரேபியாவுக்குத் தெரிவித்தன. இதனால் நாணய ஆணையத் தலைமையகம் சவூதி தலைநகர் ரியாதில் அமைவதென முடிவு எட்டப்பட்டது. பிற GCC நாடுகளைப் போலல்லாது குவைத் தனது நாணயத்தை அமெரிக்க டாலருடன் நிலையான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் குவைத் வளைகுடா தினாருக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்நாணயம் கலீஜி எனப் பெயரிடப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.