24/6/09

குவாண்டனமோ ,அபுகிரைப் சிறைச்சாலையையடுத்து ஆப்கானிஸ்தானிலும் கைதிகள் சித்திரவதை:அதிர்ச்சித் தகவல்!


சற்று காலத்துக்கு முன் கியுபாவிலுள்ள குவாண்டனாமோ சிறையிலும், ஈராக்கிலுள்ள அபுகிரைப் சிறையிலும் ஐயத்திற்கிடமான கைதிகளை அடைத்து மனிதத் தன்மையில்லாமல் சித்திரவதை செய்ததாக அமெரிக்கா மீது புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பல மனித உரிமை ஆர்வல இயக்கங்கள் அமெரிக்காவுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இக்கைதிகளுக்கான சட்ட உரிமை குறித்த சாதகமான தீர்ப்பு வர உதவியாய் இருந்தன.

தற்போது ஆப்கானிஸ்தானிலும் இதே போன்று சிறைகளில் கைதிகளை அடைத்து அமெரிக்கா சித்திரவதை செய்துவருவது வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. BBC நிறுவனம் ஆப்கனின் பக்ராம் சிறையில் அமெரிக்காவால் ஐயத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் ஆறு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட 27 பேருடன் தனித்தனியாக நடத்திய ஆய்வில் மனித நேயம் சற்றும் இல்லாமல் மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு இக்கைதிகள் ஆட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தாம் எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பது தமக்குத் தெரிவிக்கப்படவேயில்லை என்று கூறினர். தம்மை எவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.
அதிகப் பிரகாசம் உள்ள விளக்குகளைச் சிறையறையில் எரியவிட்டும், நீண்டநேரம் நிற்கவைக்கப்பட்டும், நாய்களை ஏவியும், குடிபானங்களில் தூக்கம் கெடுக்கும் மருந்துகளைக் கலந்து அளித்தும், நெற்றிப் பொட்டில் துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தியும், குளிர்காலங்களில் கடுங்குளிரான நீரையும், கோடையில் கடும் சூடான நீரையும் வெற்றுடலில் ஊற்றியும் இன்னும் பலவாறும் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக இந்த முன்னாள் 'கைதி'கள் தெரிவித்தனர். இக்கைதிகளுக்கு எவ்விதமான சட்ட உதவியும் கிடைக்காதவாறு இவர்கள் வைக்கப்பட்டனர் என்றும் இப்பேட்டியில் தெளிவானது.

ஆனால், இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பென்டகன் மறுத்துள்ளது. கைதிகள் மனிதத் தன்மையுடனேயே நடத்தப்பட்டதாக அது அறிவித்துள்ளது.