3/7/09

அமெரிக்கா: ஈராக்கில் படை வாபஸ்! ஆப்கானில் படை குவிப்பு! தலிபான்களை அழிக்க உக்கிர தாக்குதல்

தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா வெற்றி பெறவே இயலாது என தாலிபான்களின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஈராக்கிலிருந்த அமெரிக்கப் படையினர் திரும்பப் பெறும் இவ்வேளையில், அவர்கள் ஆப்கனுக்கு அனுப்பப்பட்டு தாலிபானுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளது. 4000 அமெரிக்கப் படையினரும், 650 ஆப்கன் படையினருமாக இணைந்து, நேட்டோவின் போர்விமானங்களின் உதவியுடன் இத்தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

ஆப்கனின் ஹெல்மந்த் ஆற்றின் தென்கரைப் பகுதியே தாலிபான்களின் ஆதரவுத் தளமாக இருந்து வருகிறது. இதனைக் கைப்பற்றிவிட்டால் தாலிபான்களுக்கு எதிரான பெரிய வெற்றியாக அது இருக்கும். ஆப்கனில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல்களை மனதில் கொண்டே இத்தாக்குதல்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.