3/7/09

சார்லி வில்சன்ஸ் வார்

Charlie Wilson's War என்ற அமெரிக்கப் படம் 2007-ல் வெளியானது. அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் ரஷ்யாவை வெல்ல எப்படி ஆப்கான் முஜாஹிதீன்களை அமெரிக்கா திறம்பட உபயோகித்துக் கொண்டது என்பதை விவரிக்கும் படம். உண்மை சம்பவங்களின் சுவாரஸ்யமான திரைக்கதை. சார்ல்ஸ் வில்சன் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதித்துவ சபைக்கு 12 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் திறமையான அரசியல்வாதி, முன்னாள் கடற்படை அதிகாரி. அசோசியடட் பிரஸ், அமெரிக்க காங்கிரஸிற்கு, சோவியத் ஆளுகையிலிருக்கும் ஆப்கனிலிருந்து தப்பித்துச் செல்லும் அகதிகளைப் பற்றி அனுப்பபும் டெலக்ஸ் செய்தியை சார்லி படிக்க நேர்கிறது. House Appropriations Committee என்பது காங்கிரஸ் பிரதிநிதித்துவ சபையின் கமிட்டி. பணப் பெட்டியின் மேல் அதிகாரம் கொண்ட, கறுப்பு நடவடிக்கைகளை கையாளும் சக்திவாய்ந்த கமிட்டி இதன் சப் கமிட்டியான House Subcommittee on Defense -ற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சார்லியின் கண்களின் தான் அந்த செய்தி படுகிறது. உடனே ஆப்கன் நடவடிக்கைகளுக்கு அளிக்கும் பண உதவியை இருமடங்காக அதிகரிக்க சார்லி நடவடிக்கை எடுக்கிறார்.

ஜோன் ஹெர்ரிங் என்ற மாது செல்வாக்கும், சமூக அந்தஸ்தும் கொண்ட ஓர் அரசியல் நடவடிக்கையாளர். பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியாஉல்ஹக்குடன் நம்பிக்கையான நட்புறவு கொண்டிருக்கிறார். ஜியா ஆப்கனில் ஊடுருவியுள்ள கம்யூனிச ஆபத்தை ஜோனின் கவனத்திற்கு கொண்டு வர, ஆப்கனுக்கு துணிச்சலான ரகசியப் பயணம் மேற்கொண்டு முஜாஹிதீன்களை சந்தித்து நிலவரத்தின் கடுமையை உணர்ந்திருந்தார் ஜோன். இவர் சார்லியின் மேல் செல்வாக்கு செலுத்தத்தக்க நட்பு கொண்டிருந்தார். எனவே பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சார்லியை பயணம் மேற்கொள்ள வைத்து ஜியாவை சந்திக்க வைக்கிறார். ஜியாவின் ஆலோசனையின் பேரில் ஆப்கன் அகதி முகாம்களை பார்வையிடும் சார்லியை அந்தக் காட்சிகள் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பல இழப்பிற்கும் பிறகு விடாமல் சோவியத்துடன் போராடிக்கொண்டிருந்த போராளிகளின் மன உறுதி அவருக்கு பெரும் வியப்பேற்படுத்துகிறது. ஆனால் மாபெரும் ராணுவ வல்லமை கொண்டிருந்த சோவியத்திடம் போரிட அவர்களிடம் எந்த வசதியும் இல்லை.

பெரும் மன மாற்றத்துடன் அமெரிக்கா திரும்பும் சார்லி ஆப்கன் போராளிகளுக்கு உதவ வேண்டியது அமெரிக்காவிற்கு எப்படி காலத்தின் கட்டாயம் என்பதை மற்ற அரசியல்வாதிகளுக்கு புரியவைக்கிறார். அவர்களது ஒரே நோக்கம், சோவியத்தின் தோல்வி. எப்படி அமெரிக்காவிற்கு ஒரு வியட்நாம் அமைந்ததோ, அதைப் போல் சோவியத்திற்கு இந்த ஆப்கனை மாற்ற அமெரிக்கா உறுதி கொள்கிறது. அதற்கான ஆயுத சப்ளை செய்ய அரசியலில் நேரெதிர் முகம் கொண்ட இஸ்ரேலையும், எகிப்தையும் ஒருங்கே உட்கார வைத்து காரியம் சாதிக்கும் அளவிற்கு சார்லியின் பயணம் அமைகிறது. மேலும் இஸ்ரேலின் பிரதிநிதியை ஜியா உல் ஹக் அமெரிக்காவில் பங்கு பெறும் ஒரு விருந்தில் அவரது வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படும் அளவு கலந்து கொள்ள வைத்து, இஸ்ரேலின் துணை கொண்டு எப்படி அமெரிக்கா ஆயுதம் அளிக்கும் என சார்லி ஜியாவிடம் வாக்குறுதி அளிக்கிறார்.

சார்லியின் நடவடிக்கைகளுக்கு சி.ஐ.ஏ.வின் கஸ்ட் அவ்ரகோடாஸ் பெருந்துணை. 1983-ல், கமிட்டியை இணங்க வைத்து சார்லி பெறும் 40 மில்லியன் டாலர்களில் 17 மில்லியன் டாலர்கள் மட்டும் விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆப்கன் போராளிகள் பெறும் அந்த ஆயுதங்களும், அதை இயக்க அவர்கள் பெற்ற பயிற்சிகளும் சோவியத்துடனான அவர்களது போரில் பெரும் திருப்பத்தை உண்டாக்குகின்றன. அதற்கு அடுத்த வருடமே கஸ்ட், சார்லியிடம் மேலும் 50 மில்லியன் டாலர்கள் பெற கோரிக்கை வைக்கிறார். அவ்வருட இறுதியில் பெண்டகன் தன்னிடம் மிச்சம் வைத்திருந்த 300 மில்லியன் டாலர்களை ஆப்கன் போராளிகளுக்கு சார்லி பெற்றுத் தருகிறார்.

இறுதியில் சோவியத் படுதோல்வியடைந்து ஆப்கனை விட்டு வெளியேறுகிறது. தனக்கு நிகரற்ற சவாலாய்த் திகழ்ந்து கொண்டிருந்த அந்த மற்றொரு வல்லரசின் தோல்விக்குத் தானே அமெரிக்கா காத்திருந்தது. அதற்காகத் தானே எத்தனை சதியாட்டங்கள். சத்தமிடாமல் எகத்தாளமிடுகிறது அமெரிக்கா.

உச்சக்கட்டமாய் அனைத்தும் முடிந்தபின் ஆப்கன் புணரமைப்பின் முயற்சியாக, கல்விக்காக ஒரு மில்லியன் டாலர் கேட்டு சார்லி வைக்கும் வேண்டுகோள் காங்கிரஸால் நிர்தாட்சண்யமாய் மறுக்கப்படுகிறது. அதில் சார்லி தோற்பதாய் படம் முடிகிறது.

சார்ல்ஸ் வில்சனின் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக சி.ஐ.ஏ.வின் Honored Colleague Award வழங்கப்படுகிறது. சார்ல்ஸ் வில்சன் தான் இந்த விருது பெற்ற முதல் படைத்துறை சாராத அரசு அலுவலர் - சிவிலியன். அமெரிக்க அரசியலில் வெற்றி நாயகனாய் விளங்ககினாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் குடிப்பழக்கம், போதை வஸ்து, பெண்களுடனான காமக்களியாட்டங்கள், ஆகியன பிரசித்தமானவை. அது அமெரிக்க படங்களுக்கே உண்டான கவர்ச்சி காட்சிகளை இணைக்கத் தோதாய் அமைந்து விட்டது.

சார்ல்ஸ் வில்சனாக டாம் ஹான்க்ஸ் நடிப்பு மிக நன்றாய் அமைந்துள்ளது. ஜோன் ஹெர்ரிங் பாத்திரத்தில் ஜூலியா ராபர்ட்ஸும், ஜியாஉல்ஹக்காக இந்தி நடிகர் ஓம்புரியும் நடித்துள்ளனர். உண்மை சம்பவங்களை ஒரு நாவலாய் படித்து விடலாம். அதனை சுவாரஸ்யமான சினிமாவாய் மாற்றுவது எளிதல்ல. இதில் சுவாரஸ்யம் அவர்களுக்கு முடிந்திருக்கிறது.

உலக அரசியல் வரைபடத்தில் ஆப்கன் இன்றும் மிக முக்கியப் புள்ளி. சுயநலத்திற்காக அமெரிக்கா அங்கு தனது கால்களை பதித்த வரலாற்றின் முக்கியமானதொரு பரிமாணம் உணர இப்படம் பார்க்கலாம்.