28/7/09

செக்ஸ் புகார்-உமர் அப்துல்லா ராஜினாமா

0 கருத்துகள்
ஸ்ரீநகர்: தன் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை நிராகரிப்பதாக ஆளுநர் வோரா அறிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு சோபியான் பாலியல் விவகாரம் வெளியில் வந்தது. இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் அவர்களை போலீஸார், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.
இந்த வழக்கு இப்போது சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்ட இந்த வழக்கு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கு விவகாரம் காஷ்மீ்ர் சட்டசபையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி சபாநாயகரின் மைக்கை பறித்து வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் மக்கள் ஜனநாயக கட்சி துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முஸாபர் பேக் பேசுகையில், முதல்வர் உமர் அப்துல்லா மீது திடுக் புகாரைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் பேசுகையில், இதைச் சொல்லவே எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், காஷ்மீரை உலுக்கிய சோபியான் பாலியல் வழக்கில் முதல்வர் உமர் அப்துல்லாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 102 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் அவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இவரது பேச்சால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது எழுந்த முதல்வர் உமர் அப்துல்லா, இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு. இருந்தாலும் இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று நிரூபிக்கும் வரை முதல்வர் பதவியில் நீடிக்க நான் விரும்பவில்லை. இது எனது நற்பண்புகளுக்கு ஏற்பட்ட களங்கம். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை என்னால் தொடர்ந்து முதல்வராக செயல்பட முடியாது. எனவே முதல்வர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகளை என்னால் தாங்க முடியவில்லை.
நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே கவர்னரை சந்தித்து எனது ராஜினாமாவை கொடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு தனது இருக்கையை விட்டு எழுந்தார்.
அதிர்ச்சியடைந்த அமைச்சர்களும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏக்களும் அவரை அவையை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். அவரை பிடித்து இழுத்து நாற்காலியில் அமர வைக்க முயன்றனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் அவரை சூழ்ந்து கொண்டு இழுத்து நாற்காலியில் உட்கார வைத்தனர்.
ஆனால் அதையும் மீறி எழுந்த அவர், இந்தப் பிரச்சனையில் என்னை செயல்பட அனுமதியுங்கள், எனக்கு இந்தப் பதவி வேண்டாம், முதலில் என்னை வெளியே போக அனுமதியுங்கள் என்று அவர் ஆவேசமாக கூறினார்.
ஆனால், நீங்கள் ராஜினாமா செய்தாலும் அதை கட்சி ஏற்காது, நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி அமைச்சர்கள் அவரை வெளியேற விடாமல் தடுத்தனர்.
ஆனாலும் அவர்களையும் மீறி வெளியே சென்ற உமர் அப்துல்லா நேராக ஆளுநர் என்.என். வோராவின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைத் தந்தார்.
இதையடுத்து ராஜினாமாவை வோரா ஏற்றதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை. உமர் மீதான புகார் குறித்து விசாரணைக்குப் பின் ராஜினாமாவை ஏற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களால் காஷ்மீர் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.
உமர் தனது ராஜினாமா முடிவில் தீவிரமாக இருந்தால் அவருக்குப் பதில் புதிய ஒருவரை தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தான் காஷ்மீரி்ல் இப்போது நடந்து வருகிறது.
இதற்கிடையே உமரின் ராஜினாமாவையடுத்து அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.