5/8/09

எய்ட்ஸ் விளம்பரத்தில் குடும்பப் பெண்-குழந்தை: நஷ்டஈடு கேட்டு வழக்கு

0 கருத்துகள்
சென்னை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விளம்பரப் படத்தில் தவறுதலாக குடும்பப் பெண் மற்றும் அவரது குழநதையின் படத்தை பிரசுரித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திலகவதி என்ற அந்த 25 வயதுப் பெண், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நானும், எனது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கோ, எனது மகளுக்கோ எந்த நோயும் கிடையாது.
கடந்த மாதம் எனது வீட்டு அருகே வசிப்பவர் ஒருவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அதாவது, `எய்ட்ஸ்' கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது மற்றும் எனது மகள் படம் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல எனது உறவினர்களும் தெரிவித்தனர்.
எங்கள் படத்தை எய்ட்ஸ் கட்டுப்பாடு பிரசாரத்திற்காக தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தியதாக தெரிவித்தனர். எங்கள் படத்தை பயன்படுத்த அரசு எந்த அனுமதியும் பெறவில்லை. இதுபோன்ற படத்தை வெளியிட மருத்துவமனை மூலம் எழுத்து மூலமாக அரசு அனுமதி பெறவேண்டும். ஆனால் இதை செய்யவில்லை. இதனால் எங்களுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுவிட்டது.
இந்த விளம்பரத்தால் எனது குழந்தையிடம் மற்ற குழந்தைகள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இனி இந்த படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் நான் அரசுக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால் இதுவரை அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே எங்களது படங்கள் கொண்ட பேனர்களையும், விளம்பர போர்டுகளையும் அகற்ற கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கே.சுகுணா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். இதுபற்றி பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த குளறுபடி குறித்து திலகவதி கூறுகையில், இந்த விளம்பரப் படத்தால் எனது வாழ்க்கையே கடும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. அக்கம் பக்கத்தினர் எனது நடத்தை குறித்தும், எனது குழந்தையின் நலம் குறித்தும் சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர். எனது கணவருக்கே கூட ஆரம்பத்தில் என் மீது சந்தேகம் வந்து விட்டது. இதனால் நான் பட்ட அவமானங்கள், சிரமங்களை சொல்லில் கூற முடியாது.
ஒரு கட்டத்தில் இப்படி அவமானத்துடன் வாழ்வதற்கு பேசாமல் செத்துப் போய் விடலாம் என்று கூட நினைத்தேன் என்றார்.
திலகவதியின் வக்கீல்கள் மோகனகிருஷ்ணன், ராஜசேகரன் கூறுகையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் விளம்பரத்தால் அந்தப் பெண்ணின் அமைதியான வாழ்க்கை சீர்குலைந்து போய் விட்டது.
படத்தைப் பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்த அனுமதியை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமோ, அல்லது அந்த கழகத்தின் அதிகாரிகளோ பெறவில்லை. அப்பெண்ணின் வாழ்க்கை மற்றும் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொள்ளாமல் பிரசுரித்து விட்டனர்.
இதை ஒரு சாதாரண தவறாக கருதி விடாமல், தவறு செய்தவர்கள் மீது, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் படத்தை பிரசுரிப்பதற்கு முன்பு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக தலைவரின் அனுமதியைப் பெற்றிருப்பார்கள். அவரது அனுமதி இல்லாமல் விளம்பர போஸ்டர்களை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தவறுக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், இந்த விளம்பரம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகும். இப்படி ஒரு தவறு நடந்திருப்பதாக எங்களுக்கு முன்பு புகார் வந்தது.
வழக்கமாக, விளம்பர ஏஜென்சிகள்தான் இப்படிப்பட்ட விளம்பரங்களை எங்களுக்கு தயாரித்துத் தரும். அவர்கள்தான் படத்தைப் பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்து விசாரித்திருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா என்று தெரியவில்லை.
இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக அதிகாரிகளை விசாரிக்கக் கூறியுள்ளேன். அறிக்கை தருமாறும் கூறியுள்ளேன் என்றார்.
தவறுதலான இந்த விளம்பரத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வெளியிட்ட விளம்பரங்களை அகற்றுவதற்குப் பதில் அதிக அளவில், தமிழகம் முழுவதும் இந்த விளம்பரங்களை வைத்து வருகிறார்களாம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தினர்.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.