11/8/09

மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா:அல் ஜஸீராவின் சர்வேயில் பாகிஸ்தானியர் கருத்து

0 கருத்துகள்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடும் அமெரிக்காதான் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பாகிஸ்தானியர்கள் அல்ஜஸீரா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் காலப் என்ற தனியார் நிறுவனம் ஒன்றின் பாகிஸ்தான் கிளை அமைப்புதான் அல்ஜஸீராவுக்காக இந்த கருத்தாய்வை நடத்தியது. பல்வேறு அரசியல்,மதம்,பொருளாதார,சமூக பின்னணிக்கொண்ட 2600க்கும் அதிகமான நபர்களிடம் நேர்முகம் நடத்திதான் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நடத்தும் விமானத்தாக்குதலை ஆதரிக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு வெறும் 9 சதவீதம் பேர்தான் ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்த அடாவடித்தாக்குதலை 67 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர். அமெரிக்காவின் ஆளில்லாத விமானங்கள் நடத்தும் ஏவுகணைத்தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கூட்டுக்கொலைக்கு ஆளாக்கப்படுவது பாகிஸ்தான் மக்களிடம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியதாக தி டெய்லி மெயில் நாளிதழின் ஆசிரியரான மஹ்தூம் பாபர் கூறுகிறார். பாகிஸ்தான் உளவுத்துறையோ ராணுவமோ என்ன கூறி நியாயப்படுத்தினாலும் பாகிஸ்தான் மக்கள் அமெரிக்காவை வெறுத்து ஒதுக்கிவிட்டனர் என்றும் பாபர் கூறுகிறார்.பாகிஸ்தான் அதிபர் என்ற நிலையில் ஆஸிஃப் அலி சர்தாரியின் செயல்பாடுகள் மிகவும் மோசமென 42 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் சர்தாரியை ஆதரவான கருத்தை தெரிவித்தபோதிலும் 34 சதவீதம் பேர் சரியான அபிப்ராயம் கூறவில்லை. தாலிபான்களை வேட்டையாடுகின்றோம் என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை 41 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர் 24 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர். 22 சதவீதம் பேர் நடு நிலை வகித்துள்ளனர். தலிபான்களுடன் பிரச்சனையைத்தீர்ப்பதற்கு ராணுவத்தாக்குதலா அல்லது பேச்சுவார்த்தையா என்பதற்கு 43 சதவீதம் பேர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் ராணுவத்தாக்குதல் மூலம் தீர்வு எனக்கூறியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இணைப்பை க்ளிக் செய்யவும் http://english.aljazeera.net/programmes/insidestory/2009/08/20098913144942379.html
செய்தி: தேஜஸ்,அல் ஜஸீரா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.