1/8/09

மாலேகன் குண்டுவெடிப்பு: பெண் தீவிரவாதி (துறவி) உள்ளிட்டோர் மீதான தீவிரவாத தடை சட்டப் பிரயோகம் ரத்து

0 கருத்துகள்
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் காவல்துறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 11 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (தீவிரவாத தடைச் சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நாசிக் தனி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாசிக் தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 11 பேர் மீதும் மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தீவிரவாதத் தடுப்புச் சட்டமாகும். கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டது இது.
இந்த நிலையில் பெரும் திருப்பமாக தனி நீதிமன்றம், திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்று கூறி அதை ரத்து செய்து விட்டது. மேலும், சாதாரண கோர்ட்டில் வழக்கமான வழக்காக இதை விசாரிக்குமாறும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த திடீர் திருப்பத்தால் பிரக்யா உள்ளிட்டோர் சாதாரண குற்றவாளிகள் போலாகி விட்டனர். எனவே அவர்களால் தற்போது ஜாமீனில் வெளிவரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் பிரக்யாவின் தந்தை சந்தர்பால் சிங், தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினருக்கு இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டி குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒருவர் மீது அந்த சட்டத்தை பிரயோகிக்க வேண்டுமானால், அந்த நபர் ஏற்கனவே இரு முக்கிய குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரக்யா உள்ளி்ட்டோர் மீது அதுபோன்ற குற்றச்சாட்டு இல்லாததைக் காரணம் காட்டியே தற்போது நாசிக் சிறப்பு நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
நாசிக் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மகாராஷ்டிர காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக இந்து தீவிரவாதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த வழக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்காகும். இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையிலான குழுதான் மிக துல்லியமாக விசாரித்து பிரக்யா உள்ளிட்டோரைக் கைது செய்தது.
வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களையும் கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியிருந்தது.
வழக்கு முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் துரதிர்ஷ்டவசமாக மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
கர்கரே போன பின்னர் மாலேகான் வழக்கு தொய்வு நிலையை நோக்கிப் போகத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.