16/9/09

ஆம்பூரில் கடும் வெள்ளம்-5 பேர் பலி-20 பேர் நிலை என்ன?

0 கருத்துகள்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பெய்த கன மழையி்ல் நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 5 பேர் பலியாயினர். மேலும் 20 பேரின் நிலைமை எனனவானது என்று தெரியவில்லை.
ஆம்பூரில் சென்னை-பெங்களூர்தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், சாலாவுதீன் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன.
பாலாற்றில் இணையும் இந்த கால்வாய் தான் இப் பகுதியின் பெரிய வடிகாலாகும்.
இந் நிலையில் ஆம்பூரில் நேற்று பெய்த கனமழையால் நாயக்கனேரி மலையில் உள்ள ஆனைமடுகு அணை நிரம்பியது. அதிலிருந்து காட்டாற்று வெள்ளம் கானாறு கால்வாய் வழியாக ஓடியது. இந்த நீர் கால்வாயைத் தாண்டி குடிசை பகுதிகளுக்குள் புகுந்தது. நள்ளிரவில் மழையும் வெள்ளமும் அதிகரிக்கவே குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. மின்சாரமும் தடைபட்டுவிட்டதால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் அதிகரித்த வெள்ளத்தில் பல குடிசைகளை அடித்துச் செல்லப்பட்டன.
இதில் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தாலும் மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளை மிகுந்த கடும் சிரமத்துக்கிடையே மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளத்தில் தவித்த பலரை கயிறு கட்டி மீட்டனர்.

ஆனாலும் மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகிவிட்டனர். இன்று காலை கானாறு வடிகால் மற்றும் பாலாற்றில் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் சிக்கியன. அவர்கள் அமானுல்லா என்பவரின் மனைவி முன்னி (25), மகள் ஷானு (6), மகன் அக்பர் (3) என்று தெரிய வந்துள்ளது. அமானுல்லாவை காணவில்லை. அவர் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பாலாற்றில் சேற்றுப் பகுதியில் சிக்கியிருந்த 2 வாலிபர்களின் உடல்களும் சிக்கின. இதில் ஒருவர் இலியதுல்லா (16) என்புறு தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 20க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.
வெள்ளம் அரசு பஸ் டெப்போவுக்குள்ளும் புகுந்ததில் அங்கிருந்த 10 பஸ்களும் நீரில் முழ்கியுள்ளன.
அதே போல கிருஷ்ணகிரியில் பெய்த மிக பலத்த மழையால் ஒசூர்-பாகலூர் இடையிலான தரைப் பாலமும் முழுமையாக உடைந்துவிட்டது. இதனால் இப் பகுதியிலிருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் பெங்களூர் வழியாக செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதே போல ஒசூர், தளி ஆகிய பகுதிகளிலும் மிக கனத்த மழை பெய்துள்ளது.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.