24/9/09

மேற்கு நாடுகளின் தீவிரவாதம்-அகமதி நஜாத்

0 கருத்துகள்
நியூயார்க்: மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகள் போரையும், ரத்த வெறியையும், ஆவேசத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பி வெறியாட்டம் போட்டு வருகின்றன என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதி நஜாத் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அகமதி நஜாத் பேசினார். அவர் கூறுகையில், மரியாதையுடன் எங்களை நோக்கி நீட்டப்படும் கைகளைப் பிடித்துக் குலுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், திமிருடன் கை நீட்டினால் அதை வெட்டவும் தயங்க மாட்டோம்.
மேற்கத்திய நாடுகள் திமிருடனேயே நடந்து கொள்கின்றன. ஜனநாயகத்தைப் போதிக்கும் அந்த நாடுகள், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையிலேயே நடந்து கொள்கின்றன. இதற்கு உலக நாடுகள் பதிலடி தர வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களுடைய அடக்குமுறை மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இஸ்ரேல், காஸா முனையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து வருகிறது. மனிதாபிமானமற்ற கொள்கைகளைக் கொண்டுள்ள இஸ்ரேல் அவற்றை ஃபலஸ்தீனத்தில் அரங்கேற்றி வருகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அது தலையிடுகிறது, ஆதிக்கம் செலுத்த முனைகிறது.
எந்தவித எதிர்ப்பையும் செலுத்த இயலாத அப்பாவிப் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதையும், வீடுகள், வயல்கள், மருத்துவமனைகள், பள்ளிகளை அழிப்பதையும் எப்படி குற்றமற்ற செயல்கள் என கூற முடியும்?. இந்த செயல்களை சில அரசுகள் கண்மூடித்தனமாக ஆதரிப்பது வேதனையைத் தருகிறது.
உலகின் ஒரு சிறிய சிறுபான்மை குழு (யூதர்கள்) உலகப் பொருளாதாரத்தையும், அரசியலையும், கலாச்சாரங்களையும் ஆக்கிரமிக்க முயல்வதையும், அடக்குமுறையைக் கையாளுவதையும் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.
புதிய வகை அடிமைத்தனத்தை இந்த சக்திகள் உருவாக்கி வருகின்றன. பிற நாடுகளின் கெளரவத்தை இவர்கள் சீரழிக்கிறார்கள். இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அடக்கம் என்பது வேதனையானது என்றார்.

மேலும் அகமதி நஜாத் பேசும்போது, பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் சபையில் இருக்கவில்லை. மேலும், அவர் இஸ்ரேலை கடுமையாக தாக்கிப் பேசியபோது இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.