5/10/09

போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 500 பேர் கைது

0 கருத்துகள்
கோவை: கோவையில், போலீஸ் தடையை மீறி சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த 500 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலனும் தடையை மீறி கைதானார்.
ஆயினும், முன்னறிவிப்பின்றி நான்கு இடங்களிலிருந்து கிளம்பிய ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்திவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 84ம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் அந்த அமைப்பினர் சீருடை அணிவகுப்பு நடத்துகின்றனர். கோவையிலும் அணிவகுப்பு நடத்த முன்அனுமதி கோரியிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, காந்திபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை,கோவை - காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன், மாநில செயலர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் மாரிமுத்து, கோவை மாநகர தலைவர் ராமநாதன், பி.எம்.எஸ். அகில பாரத செயலர் ராஜகோபால் உள்ளிட்ட, 200க்கு மேற்பட்ட தொண்டர்கள் பிரார்த்தனைப் பாடலைப் பாடினர். அதன் பின், அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முயன்றனர். ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். அதே நேரத்தில்,மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த முயன்றவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, ஐநூறு பேர் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.