30/6/09

அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஈராக் முடிவு

ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இத் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.
ஈராக் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. ஏராளமான இரசாயன ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது. இதனால் அந்தப் பிராந்தியத்துக்கே ஆபத்து என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள அணு உலைகளைச் சோதனையிட சர்வதேச முகவர் அமைப்புக்கு ஈராக் அரசு அனுமதி அளிக்க மறுப்பதாகக் கூறி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை ஈராக் மீது படையெடுத்தது.பெரும் தாக்குதலுக்குப் பின், அங்கு சதாம் ஹூசைன் தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அடுத்து அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று பரவலாகக் கோரப்பட்டது.
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கூட படைகள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இதனையடுத்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு உடன்படிக்கையொன்றுக்கு அமெரிக்காவும் ஈராக்கும் இணங்கின.இந்நிலையில் அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அரசு அறவித்தது. ஒபாமா அதிபராகப் பதவியேற்ற பின் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கு முக்கியத்துவம் அளித்தார்.இவ் உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ஜூன் 30 முதல் படைகளைப் படிப்படியாக விலக்கிக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படையின் முதல் பிரிவு ஈராக்கில் இருந்து வெளியேறுகிறது.
அமெரிக்கப் படைகள் வெளியேறும் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட ஈராக் அரசு முடிவு செய்துள்ளது.படைகள் வெளியேறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன. ஜூன் 30 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப்படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறுவது பெரும் வெற்றி என்று ஈராக் பிரதமர் அல்மாலிகி தெரிவித்தார்.ஈராக்கிய நகரங்கள் மற்றும் வீதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் செவ்வாய்க்கிழமை முதல் முகாம்களுக்குள் முடக்கப்படவுள்ளனர்.அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும் 2011 ஆம் ஆண்டிலேயே இங்கிருந்து முழுப்படைகளும் வெளியேறுமென்பது குறிப்பிடத்தக்கது.