28/6/09

லெபனான் பிரதமராக ஸஃத் ஹரீரி தேர்வு

லெபனானில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிப்பதில் நிலவிய குழப்பங்களின் இறுதியில் பிரதமராக ஸஃத் ஹரீரி தேர்வுச்செய்யப்பட்டார்.
புதிய அரசை உருவாக்குவதற்கு அதிபர் மைக்கேல் சுலைமான் ஹரீரிக்கு அழைப்பு விடுத்ததாக அதிபரின் அலுவலகத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.128 உறுப்பினர்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 86 உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்ற ஹரீரிக்கு அதிபர் சுலைமான் பாராளுமன்ற சபாநாயகரோடும், பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கலந்தாலோசித்தபின் இந்த அழைப்பை விடுப்பதற்கு முடிவெடுத்தார்.
2005-இல் முன்னாள் பிரதமரும் தந்தையுமான ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்டதைத்தொடர்ந்து அரசியலில் களம் இறங்கினார் ஸஃத் ஹரீரி.கடந்த 7-ந்தேதி நடைப்பெற்ற தேர்தலில் 39 வயதுடைய ஹரீரி தலைமையிலான மார்ச் - 14 கூட்டணி 71 இடங்களைப்பெற்றது.முக்கிய எதிர்க்கட்சியான ஹிஸ்புல்லாவின் தலைமையிலான மார்ச் - 8 கூட்டணிக்கு 57 இடங்கள் கடைத்தது. நேற்று முன்தினம் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் ஸஃத் ஹரீரியை ஐக்கிய அரசை உருவாக்குவது சம்பந்தமாக சந்தித்துபேசினார்.தனியார்துறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட பொருளாதாரதிட்டங்களை நடப்பில் கொண்டுவருதல் என்பது ஹரீரியின் தேர்தல் வாக்குறுதி.சவூதி அரேபியாவில் வளர்ந்த ஹரீரி லெபனானின் பிரதமராவது மத்தியகிழக்குப்பகுதியில் லெபனானுக்கு முக்கியத்தைப்பெற்றுத்தரும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
இதற்கிடையே பாராளுமன்ற சபாநாயகராக மீண்டும் ஷியாத்தலைவரும், ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் ஆதரவாளருமான நபீஹ் பெரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடர்ந்து 5-வது முறையாக பெரி இந்தப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.சிரியா ஆதரவுப்பெற்ற அமல் கட்சியின் தலைவர்தான் பெரி.
தேச ஒற்றுமையும், சமாதானமும் பேணுவதற்கான முயற்சியின் ஒரு பகுதிதான் சபாநாயகர் தேர்தல் என்று ஹரீரி கருத்துத் தெரிவித்தார். லெபனானில் அதிகார பங்கிடுதல் முறைப்படி அதிபர் கிறிஸ்தவராகவும், பிரதமர் சுன்னி முஸ்லிமாகவும், சபாநாயகர் ஷியா முஸ்லிமாகவும் இருக்கவேண்டும் என்பதற்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பாராளுமன்ற சீட்டுகளும், கேபினட் பதவிகளும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையில் துல்லியமாக பங்கிடப்படும்.
News Source:Thejas Malayalam Daily