21/6/09

டாக்டர். ஆஃபியா சித்தீக்கியை விடுதலைச்செய்வதற்கு பாக்கிஸ்தான் முயற்சி

அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தால் பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட நரம்பியல் மருத்துவரான டாக்டர்.ஆஃபியா சித்தீக்கியை விடுதலைச்செய்வதற்கு முயற்சி எடுக்க இஸ்லாமாபாத் நீதி மன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து பாக்கிஸ்தான் அரசு தனது முயற்சியை
ஆரம்பித்தது. சமீபத்தில் டெக்ஸாஸில் ஒரு மனநலமருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆஃபியாவை பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹகானி சந்தித்தார்.

கடந்த மார்ச் 30, 2003 அன்று சிந்து மாகாணம் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிலிருந்து பஞ்சாப் மாகாணமான ராவல்பிண்டிக்குக் கிளம்பினார் டாக்டர் ஆஃபியா சித்திக்கீ.
டாக்ஸியில் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பிச் சென்றவர் ஏர்போர்ட் சென்று சேரவில்லை. செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies) மடக்கப்பட்டார் என்றும் American Federal Bureau of Investigation (FBI) யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள். ஒரு வயதுப் பச்சிளம் பாலகன் உட்பட மூன்று குழந்தைகளுக்குத் தாயான டாக்டர் ஆஃபியா சித்திக்கீ குழந்தைகளுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 30.
சொல்லி வைத்தது போல் இரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC யில் செய்திகள் வெளியாகத் துவங்கின.
அதாவது டாக்டர் ஆஃபியா, ஒஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வதாகக் காரணம் காட்டி தேடப்படுவதாகத் திரும்பத் திரும்பச் செய்திகள் வரலாயின.
டாக்டர் ஆஃபியாவின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப் படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அமளிகள் ஆரம்பித்தன.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலா அளவிற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர் ஜூலை 6, 2008 இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான யுவான் ரிட்லி. சமீபத்தில் செய்தி சேகரிப்பு ஒன்றிற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் இச்செய்தியைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து வெளி உலகிற்குக் கொண்டு வந்து, உதவிக்கரங்கள் நீள வேண்டுமென்ற உறுதியான குரல் கொடுத்துள்ளார். (வாசிக்க: Press TV யின் (
Four years in Bagram as Prisoner 650 - Yvonne Ridley)
"அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம்" என்று பதைபதைக்கிறார் யுவான் ரிட்லி.
அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தான் விரைந்தார் யுவான் ரிட்லி.
பயணத்தின் போது முஆஜம் பெக் என்ற முந்தைய குவாண்டனமோ சிறைவாசி ஒருவர் எழுதிய The Enemy Combatant என்ற நூலை வாசித்த போது அவருக்குப் பொறி தட்டியது. (YouTube வீடியோ - screams of a Muslim sister)
அந்த நூலில் முஆஜம், இஸ்லாமாபாத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 2002 இல் தான் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் எழுதியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் அப்பெண் பல ஆண் காவலர்களால் கொடுமைப் படுத்தப் படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். முஆஜம் 2005 ஆம் ஆண்டு குவாண்டனமோவில் இருந்து விடுதலை ஆனபின் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்நூலை எழுதியிருந்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை, அமெரிக்காவோ பாகிஸ்தான் அரசோ டாக்டர் ஆஃபியாவைக் கைது செய்து பக்ரம் சிறைச்சாலையில் அடைத்த விஷயத்தை வெளியே சொல்லாததன் மர்மம் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
கஸ்னியிலுள்ள சிறையிலிருக்கும்பொழுது ஆஃபியா ஒரு காவல்காரனை தாக்கியதாக ஒரு வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
சட்டத்திற்கு புறம்பான அநீதமான முறையில் கைதுச்செய்யப்பட்ட ஆஃபியா சித்தீக்கியை விசாரணைச்செய்வதும் சட்டத்திற்கு புறம்பானது என பிரிட்டீஷ் பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான யுவானி ரிட்லி அவர்கள் கூறியுள்ளார்கள்.சகோதரி ஆஃபியாவின் விடுதலைக்கு நாமும் பிரார்த்திப்போம்.
செய்தி ஆதாரம் :தேஜஸ் மலையாள நாளிதழ்,
சத்தியமார்க்கம் இணையதளம்