22/6/09

ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியை மாற்றக் கோரிக்கை!


மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்புப் படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரகுவன்ஷியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு மாலேகானில் இந்து சாமியாரிணி தலைமையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் வழக்கை அதிவேக நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலேகானிலுள்ள குல் ஜமாத்தி தன்ஸிம் ஆஃப் மாலேகான் என்ற இஸ்லாமிய அமைப்பு இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாலேகானில் பேரணி நடத்தியது. இவ்வழக்கை விசாரிக்கும் ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியை 15 நாட்களுக்குள் மாற்ற வேண்டும் என்று கெடுவும் விதித்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர்கள் நாளை மகாராஷ்டிரா முதல்வரையும் உள்துறை அமைச்சரையும் நேரில் கண்டு தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் உள்ளனர்.
மேலும் கடுமையான போராட்டங்கள் மூலம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்போம் என இந்த அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் கூறினார். ஜமாத்தே அஹ்லெ ஹதீஸ், ஜமாத்தே உலேமா, ஜமாத்தே இஸ்லாமி, ஷியா இஸ்னா, அஸ்ஹரி, அஷ்ரஃபி பவுண்டேசன், போக்ரா கம்யூனிட்டி, போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவை ஹிந்துத்துவ நாடாக மாற்ற முயற்சித்த அபினவ் பாரத் மற்றும் ஹிமானி சவார்க்கருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு ரகுவன்ஷி தயங்குவது ஏன்? என்று அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கேள்வி எழுப்பினர். மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய சாமியாரிணி ப்ரக்யா சிங் தாக்கூர், அபிநவ் பாரத் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் மாலேகான் குண்டு வெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளுக்கான தொடர்பை வெளிக்கொண்டு வந்த, முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் கார்கரே மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், ஏ.டி.எஸின் தலைவராக நியமிக்கப்பட்ட ரகுவன்ஷி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று பரவலாக அறியப்படுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : twocircles