17/6/09

நெதன்யாஹுவின் பேச்சுக்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு ! அமெரிக்கா வரவேற்ப்பு!


அமெரிக்க அழுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி குறித்துத் தன் நிலையை அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, நேற்று இது குறித்து உரை நிகழ்த்தினார். இவ்வுரை பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி முயற்சிகள் குறித்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹு, இஸ்ரேலின் நிலை குறித்து தெரிவிக்கையில், "பாலஸ்தீன நாடு என்று ஒன்று அமைவதை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின், இஸ்ரேல் என்ற ஒரு யூத நாட்டின் இருப்பைப் பாலஸ்தீனர்கள் அங்கீகரிக்க வேண்டும்; பாலஸ்தீனத்திற்கென்று ஒரு இராணுவம் இருக்கக் கூடாது, பாலஸ்தீனத்திற்கென்று கடல், வான் எல்லைகள் இருக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.


இப்பேச்சினூடே இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் குடியேற்றம் நடைபெறுவதை அவர் நியாயப் படுத்தினார். இப்பகுதியில் குடியேறுவோர் அனைவரும் அமைதிக்கு எதிரானவர் அல்லர் என்று அவர் குறிப்பிட்டார்.


பாலஸ்தீனத்திற்கென்று ஆயுதங்கள் எதுவும் இருக்கக்கூடாது என அழுத்தமாக அவர் தெரிவித்தார். அவரது இப்பேச்சை பாலஸ்தீனர்கள் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டனர். அமைதி முயற்சியை ஒட்டுமொத்தமாக முடிவு கட்டுவது போல் இப்பேச்சு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


அதேவேளை நெதன்யாஹுவின் இப்பேச்சு அமைதி முயற்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருப்பதாகவும், இதனைத் தாம் வரவேற்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.