7/7/09

சீனா: முஸ்லீம்கள் மீது அடக்குமுறை 300க்கும் மேற்பட்டோர் பலி!


சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். சீன அரசு சீனாவின் பிறபகுதிகளில் இருந்து சீன இனத்தைச் சேர்ந்த மக்களைக் குடியமர்த்தி வருகிறது. சீன அரசின் இந்த நடவடிக்கை உய்குர் இன மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் பெரும்பான்மையையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாக உய்குர் இன மக்கள் கருதுகிறார்கள்.
நேற்று உரும்கி என்ற நகரில் உய்குர் இன மக்களுக்கும், சீன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் சண்டை முற்றிக் கலவரம் வெடித்தது.

இக்கலவரத்தை சீன அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட உய்குர் இன மக்கள் இறந்துள்ளனர் என்றும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அரசு செய்தி நிறுவனம் கூறுகின்றது.
20 ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் போராட்டத்தை சீன அரசு இராணுவத்தைக் கொண்டு மிகக் கடுமையாக ஒடுக்கியது. அதற்குப் பின் மிகக் கடுமையான அடக்குமுறையாக இந்நிகழ்வு இருப்பதாக சீன நோக்கர்கள் கூறுகின்றனர். உய்குர் இன மக்கள் துருக்கிய மொழியை ஒட்டிய மொழியைப் பேசி வருகின்றனர். இவர்களது மதம் இஸ்லாம். இவர்கள் தங்களைச் சீன அரசு புறக்கணிப்பதாகப் பலகாலம் கருதி வருகின்றனர்.
உய்குர் மக்களின் எழுச்சியால் சீனாவிலிருந்து ஜின்ஜியாங் மாகாணம் பிரிந்து போக நேரலாம் என சீன அரசு அஞ்சுவதால் அவர்களிடையே சீன இன மக்களைக் குடியமர்த்தி வருகிறது.