7/7/09

ஸ்ரீநகர்: காணாமல் போன இளைஞர் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்!

ஒரு வாரத்திற்கு முன்னர் இராணுவம் கைது செய்த பின்னர் காணாமல் போன 17 வயது இளைஞரை மயக்க நிலையில் கிராமத்தினர் கண்டுபிடித்தனர். பஷரத் அஹ்மத் என்ற இளைஞரை ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக இராணுவம் கைது செய்தது.
அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அவரைக் கைது செய்த இராணுவம், விசாரணைக்குப் பின்னர் அன்று மாலையே அவரை விடுவித்து விட்டதாகவும் அவரைக் குறித்துத் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் கைவிரித்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் பலத்த எதிர்ப்பு வலுத்த நிலையில், திடீரென நேற்று மாலை காணாமல் போன அஹ்மதை மயக்க நிலையில் கிராமத்தினர் கிராமத்தின் எல்லையில் கண்டனர். இதனைத் தொடர்ந்து அஹ்மத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன கடந்த வாரத்தில் அஹ்மத் எங்கிருந்தார் என்பது பற்றிய விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.