31/7/09

குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் சர்ச்சைக்குரிய தீவிரவாத தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்

0 கருத்துகள்
குஜராத் அரசு உருவாக்கியுள்ள தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் அடிப்படையில் கர்நாடக அரசும் தனது தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த மசோதாவுக்கு கர்நாடக சட்டசபை இன்று ஒப்புதல் அளித்தது. தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. ஆனால் இந்த சட்டம் தவறான முறையில் பயன்படுத்தபபடும் என காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சட்ட மசோதா குறித்து உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா கூறுகையில், தீவிரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை தெளிவாக கூறியுள்ளோம். மேலும், தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். முந்தைய சட்டத்தில் இந்த அம்சம் இல்லாமல் இருந்தது. தற்போது மரண தண்டனையை புதிதாக சேர்த்துள்ளோம் என்றார். இந்த சட்ட மசோதா விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே பாஜக ஆளும் குஜராத் மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை உருவாக்கி அதை ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு முறையும் அதை மத்திய அரசின் சிபாரிசை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கர்நாடக அரசின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...-
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாவோர் ஒரு வருடம் வரை குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே சிறையில் வைக்கப்படலாம்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.
தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் செல்போன் உள்ளிட்ட பேச்சுக்களை பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.