16/7/09

சிவிலியன்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஒப்புதல்

0 கருத்துகள்

கடந்த ஆண்டு டிசம்பர் 27இலிருந்து 22 நாட்கள் நீடித்த இஸ்ரேலின் காஸ்ஸா மீதான அராஜகத்தாக்குதலில் அப்பாவி மக்களை வேண்டுமென்றே கொன்றதாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
மேலும் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையெல்லாம் செய்தது மேலதிகாரிகளின் உத்தரவுபடிதான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு சமூக நிறுவனம் ரகசியமாக 26 இஸ்ரேல் ராணுவவீரர்களை சந்தித்து எடுத்த பேட்டியில்தான் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேகம் தோன்றும் அனைவரையும் கொன்றொழிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். வயதான பெண்களானாலும் கொல்லவேண்டும் என்பதும் அந்த உத்தரவில் அடங்கும். சுரங்கபாதைகள் உள்ளதாகவும், போராளிகளின் முகாம் என்று கூறியும் ஏராளமான கட்டிடங்களை தகர்த்துள்ளனர். கடும் ஃபலஸ்தீன் விரோதப்போக்கைக்கொண்டுள்ள சில ராணுவத்தினர் மேலதிகாரிகளின் உத்தரவை வேகமாக செயல்படுத்துவதில் முனைப்புக்காட்டியுள்ளனர். சர்வதேச சட்டங்களால் தடைச்செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸை சிவிலியன்களுக்கு எதிராக‌ பயன்படுத்தியதையும் ராணுவ வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். சோதனை நடத்துவதற்காக கட்டிடங்களில் நுழையும் ராணுவத்தினர் அங்குள்ள சிவிலியன்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். ஃபலஸ்தீனியர்களின் சொத்துக்களையும் நாசப்படுத்தியுள்ளனர். கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் காஸ்ஸாவில் சில ராணுவத்தினர் குடிதண்ணீர் வைத்துள்ள டாங்குகளில் துப்பாக்கியால் சுட்டு தண்ணீரை வீணடித்ததையும் ராணுவத்தினர் குற்ற ஒப்புதலில் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டியபொழுதெல்லாம் இஸ்ரேல் அதை மறுத்தே வந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினரே குற்ற ஒப்புதல் அளித்த நிலையிலும் இந்தச்செய்தியை காதால் கேட்டதை அடிப்படையாகக்கொண்டது என்று மறுத்துள்ளது இஸ்ரேல்.

செய்தி ஆதார‌ம்:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.