7/7/09

தலிபான் கருத்து-மன்னிப்பு கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி

0 கருத்துகள்
டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.
இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.
அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கு முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.
மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.