5/7/09

பதக்கம் வாங்குவதற்காக போலி என்கவுன்ட்டர் - எம்.பி.ஏ. பட்டதாரி அநியாயமாக பலி

டெல்லி: டேராடூன் போலீஸார் பதக்கம் வாங்குவதற்காக போலியான என்கவுண்ட்டரை நடத்தி எம்.பி.ஏ பட்டதாரியின் உயிரை அநியாயமாக பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நபரின் பெயர் ரன்பீர் சிங். உ.பி. மாநிலம் காசியாபாத் நகரைச் சேர்ந்தவர்.
எம.பி.ஏ படித்தவரான ரன்பீர் சிங்குக்கு டேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அதில் சேருவதற்காக அவர் டேராடூன் வந்திருந்தார்.
தனது நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த அவரை போலீஸார், டலன்வாலா என்ற இடத்தில் வழிமறித்தனர்.
போலீஸாருடன் அவர்கள் மூன்று பேரும் சண்டை போட்டதாகவும், துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறி சுட்டுள்ளனர். இதில் ரன்பீர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இரு நண்பர்களும் அதிர்ஷ்டசமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர்.
அத்தோடு நிற்காத போலீஸார் ரன்பீர் சிங் பையில் கத்தியும், துப்பாக்கியும் இருந்ததாகவும் கூறியது.
ஆனால் இதை ரன்பீர் சிங்கின் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர். தேவையில்லாமல் தங்களது மகனை அநியாயமாக போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரன்பீரின் தந்தை ரவீந்தர் சிங் கூறுகையில், எனது மகன் மீது எந்தவித கிரிமினல் வழக்கும் இல்லை. போலீஸார் பதக்கம் பெறுவதற்காக இந்த போலி என்கவுண்ட்டரை நடத்தியுள்ளனர்.
நான் புகார் கொடுக்கக் கூடாது என்று டேராடூன் போலீஸார் என்னை மிரட்டியுள்ளனர் என்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சுனில் வர்மா என்பவர் கூறுகையில், போலீஸார் ரன்பீர் சிங்கை அடித்து இழுத்துச் சென்றனர். துப்பாக்கியின் பின் பகுதியால் அவரை சரமாரியாக அடித்தனர். அதன் பின்னரே சுட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் டேராடூன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.