2/7/09

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரியதன்று: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்றம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புதலுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது 148 ஆண்டுகாலமாக நடப்பில் இருந்த நடப்பை மாற்றி வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் (அதாவது ஓர் ஆண் இன்னொரு ஆணுடனோ அல்லது ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனோ) உடலுறவு வைத்துக் கொள்வது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தரவல்ல குற்றமாகக் கருதப்பட்டு வந்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, இந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தீர்ப்பின் போது நீதிபதிகள், "ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம் முழு விருப்பத்தின் படி உடலுறவு கொள்வதைத் தண்டனையாகக் கருதுவது ஒருபக்கச் சார்புடையது மட்டுமின்றி மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்" என்று குறிப்பிட்டனர்.

இத்தீர்ப்பை ஓரினச் சேர்க்கை ஆர்வலர்கள் பலர் வரவேற்றுள்ள போதிலும் பொதுவாக இது எதிர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கத்தோலிக்கப் பேராயர்கள் பேரவையைச் சேர்ந்த பாதிரியார் டோமினிக் இம்மானுவேல், "தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறித்து வருத்தமோ மகிழ்ச்சியோ எங்களுக்கில்லை; அதேவேளை ஓரினச் சேர்க்கையை இந்தியாவின் கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரிக்கவில்லை" என்று கூறினார்.
மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இத்தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு "மனித இனத்திருக்கு முரணான இச்செயலையும் இத்தீர்ப்பையும் நாங்கள் முழுமூச்சாக எதிர்ப்போம்" என்று கூறினர்.
இத்தீர்ப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என தில்லியைச் சேர்ந்த சௌத்திக் பிஸ்வாஸ் என்பவர் கூறினார். இவர் தன்னை ஓரினச் சேர்க்கையில் நாட்டம் உள்ளவர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் இத்தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்துள்ளது.