10/9/09

இஷ்ரத் தீவிரவாதி என்று பொய்யான அபிடவிட்-சிக்கலில் மத்திய அரசு

0 கருத்துகள்
அகமதாபாத்: இஷ்ரத் ஜெஹான் விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் குஜராத் உயர்நீதி்மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில் இஷ்ரத்தை தீவிரவாதி என மத்திய அரசு வர்ணித்துள்ளது, தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இஷ்ரத், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீசன் ஜோஹர் ஆகியோரை கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி அகமதாபாத் அருகே வைத்து குஜராத் போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.

நால்வரும் தீவிரவாதிகள், லஷ்கர் தொய்பாவைச் சேர்ந்தவர்கள், மோடியை கொல்லும் திட்டத்துடன் வந்தனர் என்று கதையும் அளந்து விட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த நீதி விசாரணையில், அனைத்தும் நாடகம் என்று தெரியவந்தது.

இஷ்ரத் உள்ளிட்ட கொல்லப்பட்ட நான்கு பேருமே அப்பாவிகள் என்றும், இந்தக் கொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை, காவல்துறை அதிகாரி வன்சாரா உள்ளிட்ட அதிகாரிகள்தான் இதற்குப் பொறுப்பு என்று விசாரணை நடத்திய நீதிபதி தமங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மோடி அரசு வழக்கம் போல அப்படியே நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் இஷ்ரத் தொடர்பாக மத்திய அரசு செய்த குழப்பம் இப்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த மாதம் 6ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் மணி என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இந்த என்கவுண்டர் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கோரி இஷ்ரத்தின் தாயார் தாக்கல் செய்திருந்த வழக்கில், மத்திய உள்துறை இந்த அபிடவிட்டைத் தாக்கல் செய்தது.

அதில் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேருமே தீவிரவாதிகள் தான், லஷ்கர் தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அபிடவிட்டில் கூறியிருப்பதாவது...

மத்திய அரசின் பாதுகாப்பு ஏஜென்சிகளின் கூற்றுப்படி, பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவேத்துக்கு லஷ்கர் தொய்பாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. குறிப்பாக முஸாமில் என்பவருடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். குஜராத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற முஸாமில் திட்டமிட்டு வந்தார்.

ஜாவேத்திடம் இரண்டு பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவர் ஒரு ரவுடியும் ஆவார். அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அபிடவிட்டில் தீவிரவாதி என்று நான்கு பேரையும் வர்ணித்துள்ள மத்திய உள்துறை அதுதொடர்பான ஆதாரங்களை அதில் தெரிவிக்கவில்லை. மாறாக ஜாவேத்துக்கும், இஷ்ரத்துக்கும் என்ன தொடர்பு, ஜாவேத்தின் தந்தை கோபிநாத பிள்ளை மற்றும் இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர், தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்காதது ஆகியவை குறித்து விரிவாக அறிக்கையில் உள்ளது.

அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீசன் ஆகியோரை பாகிஸ்தானியர்கள் என அபிடவிட்டில் மத்திய உள்துறை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் எப்படி இந்தியாவுக்குள் ஊடுறுவினார்கள். ஜாவேத்துடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். குஜராத்தில் என்ன மாதிரியான நாச வேலைகளுக்குத் திட்டமிட்டனர் என்றும் அபிடவிட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளது குஜராத் அரசு. இந்த மனுவின் நகலை அனைத்து மீடியா அலுவலகங்களுக்கும் குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த அபிடவிட் தவறானது, இதைத் தாக்கல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ராஜேந்திர குமார் என்ற .பி.எஸ். அதிகாரிதான் இந்த அபிடவிட்டை தயாரிக்க உதவினார் என்று தெரிய வந்துள்ளது. இவர் 2002 முதல் 2005ம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தில் மாநில உளவுப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது டெல்லியில் உள்ள ஐபி தலைமையகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார்.

குஜராத் என்கவுண்டர்கள் தொடர்பான பல்வேறு உளவுத் தகவல்களை தகவல்களை ராஜேந்திர குமார் அலுவலகம்தான் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் கூறுகையில், மத்திய உள்துறை தாக்கல் செய்துள்ள இந்த அபிடவிட், 2004ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீ்ழ் பணியாற்றிய ஐபி அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாகும். எனவே இதைத் தயாரித்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.