12/6/09

காஷ்மீரிலிருந்து சி.ஆர்.பி.எஃப் வாபஸ்! - மத்திய அரசு பரிசீலனை!

சி.ஆர்.பி.எஃப் படையினர் இரு பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக போராட்டம் வலுத்து வரும் காஷ்மீரிலிருந்து மத்தியபடைகளைத் திரும்ப அழைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பாகமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படையினரின் செயல்பாடுகளைக் குறித்து கண்காணிப்பு நடத்தப்படும் என்றும் அப்பகுதியில் சமாதான நடவடிக்கைகளுக்கான அவர்களின் செயல்பாடுகள் குறைக்கப்பாடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

காஷ்மீரிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தொடர்ந்து 12 ஆவது நாளாக போராட்டம் தொடரும் இவ்வேளையில், காஷ்மீரின் தற்போதைய நிலையை நேரில் பரிசோதிப்பதற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த தினம் காஷ்மீர் வந்தடைந்திருந்தார். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் தலைமையில் கூடிய மேல்மட்ட ஆலோசனை கூட்டத்தின் இறுதியில், சி.ஆர்.பி.எஃப் படையினர் உட்பட இராணுவத்தினைக் காஷ்மீரிலிருந்து சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது. உயர் காவல்துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இராணுவத்தை விலக்கிக் கொள்வதற்கு முன்பு மாநில காவல்துறைக்குச் சிறிது சிறிதாக அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். காஷ்மீரில் அமைதி உருவாவதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இனிமேல், மாநில காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கிய இடங்கள் மற்றும் நபர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பொறுப்பு மாநில காவல்துறைக்கு அளிக்கப்படும். காஷ்மீரின் விஷயத்தில் முன்னேற்றங்களுக்கான முதல் கட்ட நடவடிக்கையே இது எனவும் ப.சிதம்பரம் கூறினார்.

காஷ்மீரில் 1990 முதல் பணி செய்து வரும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டிய நேரம் கடந்து விட்டது எனவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கருத்து கூறப்பட்டது. மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதி படுத்த, பாதுகாப்பு ஏஜன்ஸிகளிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார். தங்களின் பக்கமிருந்து வெளிப்படும் சில குறைபாடுகளைச் சர்வதேச சக்திகள் உபயோகப்படுத்த முயற்சிக்கின்றன. அதனை உணர்ந்து நம் செயல்பாடுகளைக் கவனமாக அமைத்துக் கொள்வதும்
அவசியமாகிறது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள் :- வன்புணர்ச்சி , காஷ்மீரில் போராட்டம்